செய்திகள்

”இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவது தொடர்பில் கவலையடைகின்றோம்”: ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இராணுவ மயமாக்கலே காரணமாக அமைந்துள்ளது என்றும், நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவது தொடர்பில் கவலையடைவதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் அமர்வுகள் நடைபெறவுள்ளன.
முதல் நாளான இன்று அவர் ஆப்கானிஸ்தான், இலங்கை, மியன்மார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் உரையாற்றினார்.

இதன்போது அவரால் இலங்கை தொடர்பில் வாய்மொழி மூல அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் போது, அரசியல் கைதிகளின் விடுதலையை மீளாய்வு செய்வதற்கான நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேபோன்று நாட்டில் அண்மையில் 16 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தமையை பாராட்டியதுடன், துமிந்த சில்வின் விடுதலை, 11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசன்த கரன்னாகொட விசாரணைகள் நிறுத்தப்பட்டமை மற்றும் அண்மையில் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை ஆகியன தொடர்பில் கவலை வெளியிட்டார்.

இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலைமை பரந்த அளவில் காணப்படுவதாகவும் சிவில் மக்கள் பாதிக்கப்படுகிறார்களா என்பதை தாம் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படுவது தொடர்பில் கவலையடைவதாகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான காலம் வரையரை செய்யப்பட வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்தின் கிளிநொச்சி உட்பட பிராந்திய அலுவலகங்கள் மீதான நம்பிக்கை மக்களிடையே கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அலுவலகத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த அலுவலகத்துக்கான பணியாளர்களை உள்வாங்கும் வேலையும் நடைபெறுகிறது. இதற்கான வரவு- செலவு ஒத்துழைப்புகளை உறுப்பு நாடுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-(3)