செய்திகள்

இலங்கையில் மிதிவெடிகளை அகற்ற தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்துள்ள கனேடிய அரசு

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிதிவெடி அகற்றும் பணிகளுக்கு கனடா தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மிதிவெடியற்ற சுற்றுச் சூழலை உருவாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கனடா தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்கும் என்ற அறிவிப்பை ஏப்ரல் 4 ஆம் திகதி கொண்டாடப்படும் ´மிதிவெடியகற்றும் செயற்பாட்டுக்கான உதவி மற்றும் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தில்´ அடையாளப்படுத்துவதில் இலங்கைக்கும் மாலைதீவுகளுக்குமான கனடா உயர்ஸ்தானிகராலயம் மகிழ்ச்சியடைகின்றது.

500இற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்தக் கூடிய 1000 ஹெக்டேயருக்கு மேற்பட்ட உயர் விளைச்சல் மிக்க விவசாயக் காணிகளை விடுவிக்க வசதிப்படுத்தும் வகையில், இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மிதிவெடி ஆலோசனைக் குழுவின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கனேடிய அரசாங்கம் 850,000 டொலர்களை வழங்கவுள்ளது.

கனேடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் இது குறித்து கூறியதாவது:

´மிதிவெடியினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் இலங்கையர் பாதுகாப்பாக இருப்பதில் இந்நிதியுதவி முக்கிய பங்கினை ஆற்றும். அது நாட்டில் மிதிவெடியகற்றலில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளில் முக்கியத்துவத்தினைக் கட்டியெழுப்புகிறது.

பொதுமக்கள் மீதான நிலக்கண்ணிவெடிகளின் அபாயகரமான பாதிப்புகள் கேள்விக்கிடமற்றவையாகும். எனது எதிர்பார்ப்பு என்னவெனில், கனடா போன்ற பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்கப் பணிகள் உயிர்களைப் பாதுகாத்தல், மீளத் திரும்புதலுக்கு வசதிப்படுத்தல் மற்றும் பாரபட்சமற்ற இத்தகைய ஆயுதங்களின் பாவனையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடன் உரிய சர்வதேச கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பவற்றை நோக்கி இட்டுச் செல்லும் என்பதாகும்.´

பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையக் கூடிய அல்லது சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்குத் தடையாக இருக்கக் கூடிய யுத்தத்தின் வெளிப்பாடுகளான வெடிக்கக் கூடிய எச்சங்கள் மற்றும் மிதிவெடிகள் உள்ள நாடுகளில் தேசிய மிதிவெடியகற்றல் செயற்பாடுகளின் கொள்திறனை உருவாக்கவும் விருத்தி செய்யவும் ஊக்குவிக்கும் அரசுகளின் முயற்சிகளைத் தொடர மிதிவெடியகற்றும் செயற்பாட்டுக்கான உதவி மற்றும் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம் அழைப்பு விடுக்கின்றது.

மிதிவெடியகற்றும் செயற்பாட்டுக்கான உதவி மற்றும் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தின் 2015ஆம் ஆண்டுக்கான கருப்பொருளான ´மிதிவெடிகளைவிட´ என்பதானது, நாடுகளினால் எதிர்கொள்ளப்படும் பல்வேறு வகையான வெடிபொருள்களின் அச்சுறுத்தல்களையும் வெடிக்கக் கூடிய பல்வேறு வகையான ஆபத்துக்களை இல்லாதொழிப்பதன் முக்கியத்துவத்தின் மீது கவனத்தைச் செலுத்துதலையும் கருத்திற் கொள்கிறது.

இந்தக் கருப்பொருளைக் கருத்திற் கொண்டு, இலங்கையில் மிதிவெடியகற்றல் செயற்பாடுகள் உள்ளடங்கலான மிதிவெடியகற்றல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க 2.4 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டமை மற்றும் கொத்தணிக் குண்டுகள் தொடர்பான மாநாட்டினைக் கனடா ஏற்றுக் கொண்டுள்ளமை என்பவற்றை மார்ச் 17ஆம் திகதி கனேடிய அரசாங்கம் அறிவித்தது.

இந்த அறிவிப்புடன், ´பொதுமக்கள்மீது அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதன் காரணமாக, கொத்தணிக் குண்டுகளை உலகிலிருந்து இல்லாமற் செய்ய கனடா நடவடிக்கை எடுக்கிறது´ என்று கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரொப் நிக்கொல்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய நிதியுதவியானது, முன்னாள் மோதல் பிரதேசங்களிலிருந்து பாரியளவிலான வெடிப்பொருள் கருவிகளை அகற்றுவதில் வெற்றிகரமாகச் செயற்பட்ட மெக் மற்றும் ஹலோ டிரஸ்ட் போன்ற சர்வதேச மிதிவெடியகற்றும் அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமையினூடாக இலங்கையில் மிதிவெடியகற்றும் முயற்சிகளுக்கான கனேடிய அரசாங்கத்தின் பங்களிப்பு முன்னைய முக்கியத்துவத்தைக் கட்டியெழுப்பும். இது இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு மீளக் குடியமர்த்த உதவுவதாகவிருக்கின்றது.- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.