செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியே – எதிர்கட்சித் தலைவர் பதவி பெறுவதற்கு தகுதியானவர்கள்

தேர்தல் சட்டம் மற்றும் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய எதிர்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசு கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை தமிழரசு கட்சி தமது வாதத்தை முன்வைத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரது பெயரிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது –

2010 ஏப்ரல் பொதுத் தேர்தல் முடிவில் பாராளுமன்றுக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் பாராளுமன்றிற்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகியனவே அக்கட்சிகள் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, அதிக ஆசனம் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைக்க அடுத்தபடியாக அதிக ஆசனம் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கட்சியாக தெரிவானது.

இந்நிலையில் 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் பின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமர் நியமிக்கப்பட்டு ஐதேக அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னயிணின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் ஜனாதிபதி திகழ்கின்றார். இந்த அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவி பெற்றுள்ளனர்.

மேலும் 7 ஆசனங்களைக் கொண்ட ஜனநாயக தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினரும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். அதன் அடிப்படையில் பார்க்கும் போது தற்போது பாராளுமன்றில் 14 ஆசனங்களைக் கொண்ட இலங்கை தமிழரசு கட்சியே எதிர்கட்சியாக இருக்க தகுதியுடையது.

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு இலங்கை தமிழரவு கட்சி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.