செய்திகள்

இலங்கை மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 வீதம் ஒதுக்கீடு

இலங்கையில் மாகாணசபைகளில் பெண்களுக்கு 30 சத வீத இட ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தின்படி மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி சபைகளிலும் பெண்களுக்கு பிரதிநிதித்தும் இருந்தாலும் அது போதாது. தங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் தேவை என ஏற்கனவே உள்நாட்டிலுள்ள பெண்கள் அமைப்புகளினால் குரல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது என்கின்றார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிறவேற்று இயக்குநரான சாந்தி சச்சிதானந்தம். இதுவரை காலமும் மாகாண சபைகளில் 6 சத வீத்திற்கும் மேலாக பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கவில்லை என்றும் அவரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அமைச்சரவையில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் எடுத்துள்ள இந்த தீர்மானம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது. மார்க்க ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக முஸ்லிம் அரசியல் கட்சிகளால் இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என அக் கட்சியின் செயலாளர் நாயகமான வை. எல். எஸ். ஹமீத் கூறுகிறார்.

தற்போது இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளிலும் 447 உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றுள்ள போதிலும் 5 சத வீதத்திற்கும் குறைவான பெண்களே அங்கத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக 36 உறுப்பினர்களை கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில் அமைச்சரான ஆரியவதி கலப்பதி மட்டுமே பெண் உறுப்பினராக பதவி வகிக்கின்றார். இதே நிலை தான் 38 உறுப்பினர்களை கொண்ட வட மாகாண சபையிலும் அனந்தி சசிதரன் மடடுமே பெண் உறுப்பினராகவிருக்கின்றார்

நாட்டில் பெண்களின் விகிதாசாரம் 56 சத வீதமாகவுள்ள நிலையில் 30 சத வீதம் என்பது போதாது என்பதே அவரது கருத்தாக உள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவு நடைமுறைக்கு வரும் போது ஆண்களின் ஆதிக்கத்தை கொண்டுள்ள, குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகளினால் ஏற்படுத்தப்படக் கூடிய நடைமுறைச் சிக்கல்களை முறியடிக்க பெண்கள் தயாராக வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுக்கிறார்.