செய்திகள்

இலங்கை வந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் தொடர்பில் அமெரிக்கா விசாரணை!

ஒரு மில்லியன் பரல் மசகு எண்ணெயுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அமெரிக்கா விசாரணைகளை நடத்தி வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் இருந்து இலங்கைக்கு வந்த லலிமா என்ற ஈரானிய எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

கடந்த 5ம் திகதி கொழும்புத் துறைமுகம் வந்த லலிமா கப்பல் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கத் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்யூ லோ என்ற அமெரிக்க அதிகாரி, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

தாம் அபுதாபியில் இருந்து மட்டுமே மசகு எண்ணெயை வாங்குவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, லலிமா என்ற கப்பல், கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சிங்கப்ப+ர் நோக்கி பயணம் செய்வதாகவும், ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.