செய்திகள்

இளந்தமிழகம் இயக்கம் சார்பில் சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் (படங்கள்)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆறாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, நடந்து முடிந்து இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இளந்தமிழகம் இயக்கம் சார்பில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

சென்னையின் சோழிங்கநல்லூர் சந்திப்பில் 18.05.2015 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் சர்வதேச துணையாக இந்திய அரசே இருந்து வருகிறது. அரசற்ற ஈழத் தமிழரின் சர்வதேச துணை தமிழ்நாடுதான். என்கிற முழக்கம் அங்கே வலுவாக ஒலித்தது.

மூன்று கோரிக்கைகள் இளந்தமிழகம் இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அவையாவன,

* இனப்படுகொலைக்குப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும். உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது.
* அரசியல் தீர்வு காணப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 13 ஆவது சட்டத் திருத்தம் ஓர் அரசியல் மோசடி.
* தமிழர் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளைக் சிங்களக் காலனியாக்குவதைத் தடுத்திட வேண்டும்.

இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுத் தோழர் தியாகு, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தோழர் கண்ணதாசன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர் வினோத் களிகை நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும், ஈழத் தமிழரின் 2000 ஆண்டு கால வரலாற்றையும் கூறும் ‘வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி’ ஆவணப்படத்தின் 20 நிமிட தொகுப்பு குழுமியிருந்த மக்களின் மத்தியில் திரையிடப்பட்டது.

நினைவேந்தல் கூட்டத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த ஈகியருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர் நீத்த ஈகியரின் மகத்தான கனவான தமிழீழத் தாயகக் கனவை நனவாக்குவோம் என்று முழக்கம் எழுப்பி உறுதிமொழி ஏற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC7896 (1)

DSC7896 (2)

DSC7896 (3)

DSC7896 (4)

DSC7896 (5)

DSC7896 (6)

DSC7896 (7)