செய்திகள்

இளம் கண்டுபிடிப்பாளர் ரோகிதாவுக்கு வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டு பிடித்துள்ளார்.மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் திருமதி பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடனும் கழிவுப்பொருட்களின் ஊடாக ரோபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார்.

யுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு களமுனையில் தனது தந்தையை இழந்த இம்மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதுடன் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுவருகின்றார்.இந்நிலையிலேயே மாகாண மட்டப் போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டு இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்டபோதிலும் போதியளவு நிதி வசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகைப் பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்தார்.

இதன்போது கழிவுப்பொருட்கள் என பயன்படுத்தாது எறியப்பட்ட பொருட்களையும் தனது கண்டுபிடிப்புக்கு மாணவி பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை கண்டுபிடித்தார்.இக்கண்டுபிடிப்பினை மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்க வைத்ததன் ஊடாக மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட இம்மாணவி தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியும், இளம் கண்டுபிடிப்பாளருமான பி.ரோகிதாவை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. லண்டனை சேர்ந்த கந்தப்பிள்ளை திலீபனின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சத்தின் ஊடாக இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாதனை மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன் சிறிதளவான நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இதன்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஷ்ட சட்டத்தரணி க.தயாபரன், வைத்திய கலாநிதி கோணேஸ்வரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வர்த்தகர் சங்கம், வர்த்தகர் நலன்புரிச் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் உட்பட மாணவியின் தாயார் மற்றும் ஆசிரியை உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)vavuniya-student-081219-seithy (2) vavuniya-student-081219-seithy (4) (1) vavuniya-student-081219-seithy (4) vavuniya-student-081219-seithy (5)