செய்திகள்

ஈரானால் அச்சுறுத்தலிற்குள்ளாகும் எந்த மத்திய கிழக்கு நாட்டிற்கும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்- ஜோன் கெரி

யேமனில் ஹெளத்தி போராளிகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவதற்கு அமெரிக்கா தனது கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானால் அச்சுறுத்தலிற்குள்ளாகும் எந்த மத்திய கிழக்கு நாட்டிற்கும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவை வழங்குகின்றது என்பது வெளிப்படையான விடயம்,ஓவ்வொரு வாரமும் அவர்களுக்கு விநியோகங்கள் ஈரானிலிருந்து வருகின்றன, ஓவ்வொரு வாரமும் விமானங்கள் ஈரானிலிருந்து வந்து செல்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியகிழக்கு பிராந்தியம் ஸ்திரத்தன்மையை இழப்பதையும்,மக்கள் தேச மற்றும் சர்வதேச எல்லைகளை கடந்து மோதலில் ஈடுபடுவதையும் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்பதை ஈரான் புரிந்துகொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யேமனின் ஹெளத்தி போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சவுதிஅரேபியா தலைமையிலான நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
ஹெளத்தி போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஈரான் அதேவேளை யேமனிற்கு தனதுஇரு கடற்படை கப்பல்களை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.