செய்திகள்

ஈழத்து எழுத்தாளர்கள் தொடாத பல பக்கங்கள் உண்டு: வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன்

அருஜுனா அருள்

ஈழத்து எழுத்தாளர்கள் பரவலாக தொடாத பக்கங்கள் பல உண்டு என்று கூறும் ஈழத்து இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன், குறிப்பாக ஓரினசேர்க்கை, சிறுவயது பாலியல் குற்றங்கள் போன்றவையே பெரும்பாலும் பரவலாக எழுதப்படாத அந்தப் பக்கங்கள் என்கிறார். அத்துடன் ஈழத்து எழுத்தாளர்கள் நல்ல சிந்தனைகள், மற்றும் ஆழமான கருத்துக்களை கொண்டிருக்கின்றபோதிலும் அவற்றை எழுத்துருவம் கொடுக்கும்போது இந்திய எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் சற்று ‘அழகியல் பற்றாக்குறை’ ஏற்ப்பட்டுவிடுகிறது என்பதும் அனோஜனின் கருத்து.

தன்னுடைய பேனா முனைந்திருக்கும் பல முனைப்புக்களை தொகுத்து “சதைகள்” எனும் சிறுகதை தொகுப்பை நேற்று சனிக்கிழமை வெளியிட இருந்த அந்த பதற்றம் கலந்த மனநிலையில் எங்களுடன் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்கள்:

எழுத்து துறையில் பயணிப்பதற்கான ஆர்வம் எப்படி ஏற்பட்டது ? அதற்கான பின்புலத்தை ஏற்படுத்தி தந்தவர்கள் யார் ?

சிறு வயது முதலே வீட்டில் வாசிப்பிற்கான சூழல் இருந்து வந்தது, எனது அப்பா, அம்மா, அக்கா மற்றும் அண்ணா போன்றோரிடம் இருந்த வாசிப்பு பழக்கத்தின் விளைவாக சாண்டிலியன், அகிலன், சுஜாதா, ஜெயமோகன் போன்றோரது புத்தகங்கள் வீட்டு மேசையில் தவிர்க்க முடியாதவை ஆகி இருந்தன. சிறுவயதில் நாட்டின் போர்சூழல் காரணமாக பொழுதுபோக்கிற்கான இன்றைய பல அம்சங்கள் அன்று இருக்கவில்லை எனவே எனது அப்பா அப்போது கச்சேரிக்கு முன் இயங்கி வந்த நூல் நிலையத்திற்கு அழைத்து செல்வார், சிறுவர் பகுதியில் உள்ள நகைச்சுவை கதைகளை விரும்பி படித்துவந்த நான் பதின்மவயத்தை எட்டியதும் வாசிப்பில் இருந்த ஆர்வம் என்னை எழுத்து துறை நோக்கி நகர்த்தி சென்றது. அப்போதெல்லாம் பாடசாலை முடிந்ததும் தனியார் கல்வி நிலையத்திற்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் மத்தியில் நூல்நிலையம் அனுப்பி வாசிப்பின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தி தந்த பெற்றோர்கள் தான் எனது எழுத்து துறையில் இன்றைய வளர்ச்சிக்கு காரண கர்த்தாக்கள்.

ஆரம்பத்தில் எனது புனைவுககளை பல பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஏடுகள் வெளியிட தயக்கம் காட்டி நின்ற சூழலிலும் விடா முயற்சியினாலும், எழுதுவதில் உள்ள இன்பத்தை விரும்பி சுவைப்பவனாகவும் இருப்பதால் என்னை நானே எழுத்து துறையில் மேம்படுத்தி கொள்வதற்காக முயன்று இன்று அதன் விளைவாக ஒரு சிறுகதை தொகுபையே வெளியிடப்போகின்றேன்.

Anojan Balakrishnan Sathaikal short stories (1)

ஆரம்பத்தில் மறுக்கப்பட்ட என் புனைவுகள் காலப்போக்கில் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள், மற்றும் ஏடுகளில் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்ததை எனது முயற்சிக்கான ஒரு பலனாகவே பார்த்தேன் அது எனக்கு உற்சாகத்தையும் தந்தது. இந்திய எழுத்தாளர்களது வாசிப்பில் அறிமுகமான என் தேடல் ஈழ எழுத்தாளர்களின் வாசிப்பபை நோக்கி பயணிக்கையில் இந்திய எழுத்தாளர்களின் எழுத்திற்கும் ஈழ எழுத்தாளர்களின் எழுத்திற்கும் இடையில் உள்ள அழகியல் நடைக்கான வேறுபாட்டை நன்றாகவே உணர்ந்தேன், ஆகவே அந்த இடைவெளியை நிரப்ப வேண்டுமென்பதே எனது எழுத்திற்கான முனைப்பு.

உங்களது எழுத்த்தார்வத்திற்கும் , புனைதிறனுக்கும் பின்னால் நீங்கள் கல்வி பயின்ற பாடசாலையின் பங்களிப்பு என்ன ?

நான் கல்வி பயின்றது இலங்கையில் மிகவும் புகழ் பூத்த 193 வருட பாரம்பரியம் கொண்ட யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரியில். ஆனால் எனது எழுத்தார்வத்தின் மீது எனது பாடசாலையின் தனிப்பட்ட பங்களிப்பு என சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் எனக்கு ஞாபகத்தில் இல்லை என்பதே உண்மை. காரணம் இன்றைய சூழலில் பாடசாலைககளின் நோக்கம் வெறுமனவே சிறந்த தேர்வு மட்டத்தை எட்டிப்பிடிப்பதாக மட்டும் இருக்கின்றதே தவிர ஒரு மாணவனின் தனிப்பட்ட கல்வி சாரா திறமையை கண்டறிந்து அதற்கு உரமிட தயக்கம் காட்டியே நிற்கின்றன.

எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது பாடசாலையில் படிக்கும் போது பல எழுத்தாளர்களின் பல்துறை சார் புத்தகங்களை பாடசாலையில் நண்பர்களுக்கு இடையில் பரிமாறுவதே குற்றமாக பார்க்கப்பட்டது. நான் தரம் 5 படிக்கும் போது எனது வகுப்பாசிரியர் கதைப்புத்தகங்களை பாடசாலைக்கு யாரும் கொண்டுவர கூடாது என கூச்சலிட்டு எங்களது புத்தகங்களை பறிமுதல் செய்து தூக்கிப்போட்டதை ஒரு முதிர்ச்சியற்ற ஒரு செயலாகவே பார்க்கின்றேன் .

அதேசமயம் பாடசாலையில் நடைபெறும் கதை, கட்டுரை, கவிதை, மற்றும் விவாதம் சார் போட்டிகளில் பங்குபற்றி பாடசாலை சார்ந்து எனது எழுத்துக்கான சிறு சிறு அங்கீகாரத்தை பெற்று இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை. குறிப்பாக சென் ஜோண்ஸ் கல்லூரியில் முகுந்தன் ஆசிரியர் நான் கணித பிரிவில் படித்தாலும் எழுத்து துறைக்கு நீ போனால் உன்னால் நிட்சயம் பெரிதாக சாதிக்க முடியும் என்று அன்றே எனது முயற்சிக்கு முடிசூட்டினார்.

நீங்கள் வெளியிட இருக்கும் சிறுகதை தொகுப்பு “சதைகள்” பற்றிய உங்களது பார்வை என்ன ? இது எந்த வகையில் புதுமை கொண்டது மற்றும் இதன் சிறப்பியல்புகள் எவை ?

இது என்னுடைய முதலாவது சிறுகதை தொகுப்பு, நான் இதுவரை பல சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளில் இருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே “சதைகள்”.

இதன் சிறப்பு யாதெனின் இதுவரை காலமும் போர்ச்சூழல் மற்றும் அது சார்ந்த அம்சங்களை அலசிச்செல்லும் பல புனைவுகளை படித்திருப்போம் ஆனால் “சதைகள்” எனும் சிறுகதை தொகுப்பு போர்க்காலத்திற்கு பிந்திய தலைமுறை பற்றி பேசும் ஒரு புதுமையான மற்றும் இளமையான படைப்பு.

குறிப்பாக ஆண்மைய்யவாத எண்ணப்போக்கை கொண்டமைந்த நம் தமிழ் சமூகம் பெண்களை எப்படி கொண்டாட்ட பொருளாக ஒரு போகப்பொருளாக பார்கின்றார்கள் என்பதை இத்தொகுப்பில் உள்ள சில சிறுகதைகள் சுவாரசியமாக சொல்லிச்செல்லும்.

இப் புத்தகம் முற்று முழுதாக இலங்கையில் வடிவமைக்கப்பட்டது , முன் அட்டையிலும் அதன் அச்சிலும் சிறந்த தரத்தை கொண்டமைந்ததோடு மட்டுமின்றி இதன் அட்டை வடிவமைப்பு மற்றும் அச்சுப்பதிவு யாவும் நான்காம் தலைமுறை இளைஞர்களால் வடிவமைக்கப்பட்டதும் குறிப்பிட தக்கது.

இச் சிறுகதை தொகுப்பின் தலைப்பு ” சதைகள்” இத் தலைப்பு கூறும் செய்தி ?

சதைகள் என்பது இச் சிறுகதை தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு. ஒரு ஆண் எவ்வாறு பெண்ணின் முலைகளை பார்க்கின்றான் என்கின்ற அன்றாட சதைகளை நோக்கி குவிக்கப்படும் ஆணின் பார்வை பற்றிய கதை இது. அத்தோடு இச் சிறுகதை தொகுப்பில் பல கதைகள் காமம், பாலியல் தொடர்பான வரட்சியான ஒரு கீழைத்தேய பார்வையை கொண்டமைந்த ஆண் ஆதிக்கம் பற்றி அதிகம் பேசுகின்றது.

ஒரு எழுத்தாளனாக நீங்கள் உங்கள் எழுத்தில் செய்ய இருக்கின்ற புரட்சி எது ? ஈழத்து எழுத்தாளர்கள் அதிகமாக தொடாத மற்றும் தொட தயங்குகின்ற களங்களை உங்கள் பேனா தொடுமா ?

ஈழத்து எழுத்தாளர்கள் பரவலாக தொடாத பக்கங்கள் பல உண்டு, குறிப்பாக ஓரினசேர்க்கை, சிறுவயது பாலியல் குற்றங்கள் போன்றவை பெரும்பாலும் பரவலாக எழுதப்படாத பக்கங்கள். அத்தோடு ஈழத்து எழுத்தாளர்கள் நல்ல சிந்தனைகள், மற்றும் ஆழமான கருத்துக்களை கொண்டிருப்பினும் அவற்றுக்கு எழுத்துருவம் கொடுக்கும்போது இந்திய எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகையில் ஈழத்து எழுத்துக்களில் அழகியல் பற்றாக்குறை அதிகம் உள்ளது கண்கூடு. அழகியல் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் என்பதே எனது அவா. இதற்காக நான் எழுதிக்கொண்டு இருக்கும் அதே சமயம் சக எழுத்தாளர்களின் படைப்புக்கள் சார்ந்த விமர்சனங்கள், விவாதங்களிலும் கலந்து கொள்கின்றேன் பல எழுத்து சார் விமர்சன உரைகளையும் ஆற்றி வருகின்றேன்.

வளர்ந்து வரும் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களின் முயற்சிகள் யாவும் வெற்றிபெற வாழ்த்துகின்றோம் !!!