செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: ‘முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவைக்கு எதிராக ‘நடவடிக்கை எடுக்கலாம்”: ஜனாதிபதி!

“முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையை உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் குற்றவாளிகளாக ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று, அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசாங்கம் நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, தொடர் நடவடிக்கைகளுக்காக நீதியரசர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிடமும் கையளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிறைவேற்ற முடியுமென்றுத் சுட்டிக்காட்டினார்.

அதற்கு அவசியான மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளதென்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், அதனால் கோரிக்கைகளை முன்வைக்கும் கவனமாக இருக்குமாறும் மக்களை ஏமாற்ற வேண்டாமென்றும் எதிர்க்கட்சியினருக்குத் தெரிவித்தார்.

உலகளாவிய உயர் தொழில்நுட்பத்துடன் தென்கிழக்கு ஆசியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “தெற்காசியாவின் பிரவேசமான அதிவேக வான் நுழைவாயில் ” என்று கருதப்படுகின்ற “கல்யாணி பொன் நுழைவாயில்” பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நேற்று (24) மாலை மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் போது தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், 2005 – 2010 மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் நாட்டின் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிலையான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றுப் பரவல் காலத்திலும்கூட, உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவையனைத்தையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், எதிர்காலத்தில் நாட்டை மூடவேண்டி ஏற்படாதிருப்பின், உறுதியளிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய முடியுமென்று மேலும் கூறினார்.
-(3)