செய்திகள்

ஈ.பி.ஆர். எல்.எவ் சார்பில் போட்டியிட வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை மாவை சேனாதிராசா தடுத்துவிட்டார்: அனந்தி குற்றச்சாட்டு

எதிர்வரும் தேர்தலில் தமிழரசுச் கட்சி சார்பில் போட்டியிட சந்தர்ப்பம் தருமாறு தான் விடுத்திருந்த கோரிக்கையை தமிழரசுக்கட்சி தட்டிக்கழித்திருக்கும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தனது சார்பில் போட்டியிடுவதற்கு EPRLF கட்சி சந்தர்ப்பம் தருவதற்கு முன்வந்தபோதும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முட்டுக்கட்டை போட்டுவிட்டதாக வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இன்று ஞாயிறுக்கிழமை சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” தேர்தலில் போட்டியிட தமிழரசுக் கட்சி சார்பில் சந்தர்ப்பம் தருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் நான் கோரிக்கை வைத்திருந்தேன். அது தொடர்பில் எந்த முடியும் எடுக்கப்படவில்லை. ஆனால், யாழ் மாவட்டத்தில் EPRLF ற்கு வழங்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றை எனக்கு தருவதாக அந்த கட்சி தெரிவித்த போது, அதனை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முற்றாக மறுத்து விட்டார். அனந்திக்கு எக்காரணம் கொண்டும் ஆசனம் வழங்கப்படக்கூடாது என்றும் அவர் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். நான் இப்பொழுதும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருப்பதால் வேறு கட்சியில் ஆசனம் வழங்கப்படக்கூடாது என்றும் ஆனால் தாங்களும் வழங்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் ” என்று அவர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ஆனந்தி, குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்தில் இந்தியாவின் பங்கு குறித்து தான் குறிப்பிடுவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அறவே பிடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மாகாண சபை உறுப்பினராக இருந்து கொண்டு தான் கூறும் இவ்வாறன உண்மையான கருத்துக்கள் , தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டால் பெறுமதி பெற்றுவிடும் என்றும் அது கூட்டமைப்புக்கு சங்கடமான நிலைமையினை உருவாக்கிவிடும் என்றும் கூட்டமைப்பு தலைமை கருதுவதாகவும் அவர் கூறினார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=ElOKX6fnTfU” width=”500″ height=”300″]