செய்திகள்

உத்தம வில்லன்: சிக்கல் தீர்ந்தது இப்படித் தான்

சிக்கல்கள் தீர்ந்து தமிழமெங்கும் உள்ள திரையரங்குகளிலும் நேற்று பிற்பகல் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ படம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள படம் ‘உத்தம வில்லன்’. கமல்ஹாசன், கே.பாலசந்தர், பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 1,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உத்தமவில்லன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான முன்பதிவு அந்தந்தத் திரையரங்குகளிலும், இணையதளங்களிலும் கடந்த வாரத்தில் நடைபெற்று வந்தது. முன்பதிவுகளுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததால் முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் ஐந்து நாள்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது.

இந்நிலையில், ரசிகர்கள் வெள்ளிக்கிழமை காலை முதலே திரையரங்குகளில் படத்தைக் காண ஆர்வத்துடன் காத்திருந்தனர். படத்தைத் திரையிடுவதற்கான “க்யூப்’ தொழில்நுட்பங்கள் திரையரங்குகளை வந்து சேரவில்லை. இதனால் காட்சிகளின் நேரம் தள்ளிப்போனது. தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலைக் காட்சி ரத்தான நிலையில் பிற்பகல் காட்சிகளுக்காக ரசிகர்கள் காத்திருந்ததனர். அப்போதும் படம் திரையிடப்படவில்லை. ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிருப்தி அடைந்த ரசிகர்கள், தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் போராட்டமும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இந்நிலையில், மாலைக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து படக்காட்சி ரத்தானது. டிக்கெட்டுக்களுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரசிகர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தினர், ‘அஞ்சான்’ படத்துக்காகவும், அதைத் தொடர்ந்து தயாரித்த ஒரு சில படங்களுக்காகவும் நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கியிருந்தனர். அந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை. அதனாலேயே ‘உத்தம வில்லன்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

27 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை

இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட சங்க நிர்வாகிகள், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருந்த நிதி நிறுவன நிர்வாகிகளிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை நேற்று வெள்ளிக்கிழமை இரவு வரை நீடித்தது. அதனால் ‘உத்தம வில்லன்’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து 27 மணி நேரமாக நடைபெற்று வந்த சமரசப் பேச்சுவார்த்தையின் இறுதியில், சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகல் தமிழகமெங்கும் இப்படம் வெளியானது.

பேச்சுவார்த்தைக்கு பின் ஈராஸ் அலுவலகத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமி, ஞானவேல்ராஜா, சி.வி.குமார், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பைனான்சியர் அன்பு உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சிக்கல் தீர்ந்தது

சரத்குமார் கூறுகையில், ” ‘உத்தம வில்லன்’ படத்திற்கு இருந்த பிரச்னைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. ‘கொம்பன்’ படத்திற்கு பிறகு திரையுலகினர் அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்னையை பேசி தீர்த்திருக்கிறோம். இப்படம் வெளியாகமால் இருந்ததுக்கு எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும் இல்லை” என்றார்.

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்: லிங்குசாமி

அப்போது லிங்குசாமி கூறுகையில், “இப்படம் தாமதத்திற்கு மன்னிப்புக் கோருகிறேன். தமிழ், தெலுங்கு, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் மதிய காட்சிகளில் இருந்து இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படம் வெளியாக எனக்கு உதவி புரிந்த ஞானவேல்ராஜாவுக்கு நான் மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய உதவியை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

நானும் கமல் ரசிகன்தான். அவரது படத்தை முதல் முதல் காட்சி பார்ப்பதில் ரசிகர்களுக்கு மிகவும் ஆர்வம் இருந்திருக்கும். அவ்வாறு முதல் நாள் ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள், அவரது படத்தை காண முடியாத நிலை ஏற்பட்டதற்காக கமல் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.