செய்திகள்

உயிரைப் பணயம் வைத்து போர்ப் பகுதிகளுக்குச் சென்ற எமக்கு புலி முத்திரையா: ரத்தன தேரர் சீற்றம்

“யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எங்களது உயிரைப் பணயம் வைத்து அப்பகுதிகளுக்குச் சென்று, இராணுவத்தினரை ஊக்கப்படுத்திய எங்களுக்கு புலி முத்திரை குத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது” என ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதுரலியே ரத்தன தேரர் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மாதுலுவாவே சோபித்த தேரர், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ராஜித்த சேனாரத்ன, சுஜீவ சேனசிங்க, அர்ஜ§ன ரணதுங்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரத்தன தேரர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

“சிங்கள பௌத்தர்களை குழப்புவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. பௌத்த தேரர்களுக்காக காவி உடைகளை பகிர்ந்தளிக்கின்றனர். கைக்கடிகாரங்கள் மற்றும் அலைபேசிகளையும் விநியோகிக்கின்றனர். இவற்றையெல்லாம் செய்வதற்கு இந்த அரசாங்கத்திடம் எங்கு பணம் உள்ளது. எவ்வாறெனினும், இவர்களது நடவடிக்கைகளில் ஒரு உண்மை மாத்திரம் தெளிவாகிறது. இவர்கள் எங்களைக் கண்டு பயந்துவிட்டார்கள்’ என்றார்.

‘சுனாமி நிவாரணச் சபைக்கு எதிராக ஒமல்பே தேரர், தலதா மாளிகைக்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டமொன்றை நடத்திய போது, அவ்விடத்துக்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ, ‘சுனாமி நிவாரண சபையை கொடுத்தால் பரவாயில்லை’ என்றார். இது தொடர்பில் என்னுடனும் கலந்துரையாடினார். நான் இப்பொழுது சொல்வது பொய் முடிந்தால் சொல்லட்டும்.

மாவிலாறு அணைக்கட்டை புலிகள் இயக்கம் மூடிய போது, அதைத் திறந்து மக்களுக்கு நீர் வழங்குவதற்காக நாம் முன்னால் சென்றபோது, அதற்கு எதிராக என்னுடன் சுமார் 40 நிமிட விவாதத்தில் ஈடுபட்டார். முடிந்தால் இதையும் மறுக்கட்டும் பார்க்கலாம் என்று தேரர் சவால் விடுத்தார்.

யுத்தத்தில் காயமடைந்திருந்த இராணுவத்தினரை நாங்கள் தான் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் சென்றோம். நாங்கள் இருந்த இடங்களில் குண்டுகள் விழுந்து வெடித்தன. இருந்தும் நாம் பயந்து பின்வாங்கவில்லை. அதற்கு அந்த இராணுவத்தினரே சாட்சி.

தேர்தலில் தோற்றதன் பின்னர் இராணுவத்திரைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தில் இருக்க முயன்றார் அது பயனளிக்காது. இராணுவத்தினரின் பிள்ளைகளது இதயங்கள் இந்த ரத்தன தேரருடனேயே இருக்கின்றன’ என்று அவர் மேலும் கூறினார்.