செய்திகள்

உயிர்களையும் உலகையும் காத்தநாள் மகாசிவராத்திரி

போர்முகம் கொண்டு பிரச்சினையைத் தீர்க்காது தடுத்து அடிமுடி தேடவைத்து உயிர்களையும் உலகையும் காத்தநாள் மகாசிவராத்திரி

 

சருவேசுரப்படை ஏவப்பெற்று உலகெங்கும் அக்கினி பரவத் தொடங்கிய நேரம்.

 

Sivarathri-1உயிர்களையும் உலகையும் தோற்றுவிக்கும் பொறுப்பினைப் பெற்ற பிரம்மனும், காக்கும் பொறுப்பினைப் பெற்ற திருமாலும் தம்பொறுப்புக்களை மறந்து தம்முள் யார் பெரியவர் என்று நிகழ்த்திய சொற்போர் ஆயுதப்போராகி, சாதாரண ஆயுதங்களை எல்லாம் பிரயோகித்தும் யுத்தம் முடிவுறாத நிலையில் இருவரும் சருவேசுரப்படையினைப் பிரயோகித்த வேளையது. சருவேசுரப்படைகள் ஒன்றுடன் ஒன்று மோதியதும் அக்கினி பிரவாகமெடுத்துப் பெருகத் தொடங்கி விட்டது. இதனால் உயிர்களும் உலகும் அழிவறாது தடுத்திட, உயிர்களின் மேலுள்ள பெருங்கருணை என்னும் பாசத்தால் பரமன் பார்கடந்த விண்கடந்த நீள்ஒளியாகத் தன்னை வெளிப்படுத்தினான். திகைத்து நின்ற பிரம்மனையும் திருமாலையும் சண்டையை நிறுத்தி தன் அடியையும் முடியையும் எவர் காண்கின்றீர்களோ அவரே பெரியவர் எனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான புது உத்தியை முன்வைத்து உயிர்களையும் உலகையும் காத்த புனித நாள்தான் சிவராத்திரி

உயிர்களையும் உலகையும் தோற்றுவித்தலைச் செய்தலால் தானே பெரியவன் என்ற எண்ணத்தில் தன்னைப் பெரியவனென நினைத்த பிரம்மா அன்னவாகனத்தில் நீள்ஒளியின் முடிவு எங்கே என முடிதேடிப் புறப்பட்டார்.
காத்தலைச் செய்வதால், பிரம்மனையும் தானே காத்தலால், தானே பெரியவன் என்று கருதிய திருமால் நீள்ஒளியின் உற்பத்தி எங்கே என்று அடிதேடிப் புறப்பட்டார்.

அன்னம் தெளிவைக் கொடுக்கும் குறியீடு. இங்கோ முடிதேடும் ஆசையால் மயக்கத்தைத் தரும் தேடலுக்கு வாகனமாகிறது. வானில் பறக்கும் கருடனை வழமையான வாகனமாக ஏற்கும் திருமால் இங்கு வராக வாகனத்தில் நிலத்தைத் துளைத்துச் சென்று அடிதேடுகின்றார். இந்தக் குறியீட்டு மாற்றங்கள் அறிவினால் ஏற்படும் அகங்காரமும் மயக்கத்தைத் தரும். செல்வத்தால் ஏற்படும் நானே எதனையும் அனுபவிக்கலாம் என்னும் மமகாரமும் மயக்கத்தைத் தரும் என்கிற உண்மை உணர்த்தப்படுவதைக் காண்கிறோம்.

அறிவுகொண்டு அன்பைப் பண்பை வளர்க்காது அறிவினால் பொருளை பதவியை அதிகாரத்தைத் தேடு என அகந்தையை வளர்த்து வானில் பறக்கும் ஏவுகணைகளைச் செய்து உயிர்களையும் உலகினையும் அழிக்க முற்படவைக்கும் அறிஞர்களுக்கு அன்னத்தில் முடிதேடும் பிரமன் உதாரணமாகிறான். நிலம் என்னும் செல்வத்தின் எல்லைகளைப் பெருக்குவதற்காக குந்தக்குடியிருப்பும் கூட ஒருவர்க்குக் கொடுக்காது பகிர்வை மறுத்து, வீட்டில் முரண்பாடுகளையும், நாட்டில் யுத்தங்களையும் தோற்றுவிக்கும் இல்லத் தலைவர்களினதும் நாட்டுத்தலைவர்களுக்கும் வராகவடிவில் நிலத்தைத் துளைத்துச் செல்லும் திருமால் உதாரணமாகிறான்.

அறிவாலும் சத்தியத்தைச் சிவத்தை சுந்தரத்தைக் காணமுடியாது. ஆற்றலாலும் உண்மையை நன்மைத்தனத்தை அழகை ஏற்படுத்த இயலாது. இதனை உணர்த்துகிறது பிரம்மனால் முடிகாண இயலாத் தேடலும் திருமாலால் அடி காண முடியாத் தேடலும். ஆற்றல் கொண்டு செயற்படுவர்கள் முயற்சித்துக் களைத்துத் திகைப்பர். அறிவுகொண்டு செயற்படுவர்கள் குறுக்குவழி தேடி என்கிலும் தாம் நினைத்ததைத் சாதிக்க முயல்வர். இதற்கு உதாரணமாய்ப் பிரம்மன் மேலிருந்து விழுந்த தாழம் பூவைத் தனக்குச் சாதகமாக முடிகண்டு எடுத்ததாக உண்மைக்கு மாறானமுறையில் நினைத்ததைச் சாதிக்க முயல்கிறான். திருமாலோ அடிகாண இயலாது திகைத்து நிற்கிறான். முன்னவன் உண்மைக்கு மாறாக நடக்க முயன்ற காரணத்தால் கோவில் கட்டிக் கும்பிடப்படும் தகுதியினைத் தான் இழந்தான். தாழம் பூவும் வழிபாட்டில் இடம்பெறும் தகுதியிழந்தது.

Sivarathri-2இந்நிலையில் பிரம்மனும் திருமாலும் தம் ஆணவத்தின் தன்மை உணர்ந்து சிவப்பரம்பொருளிடம் சிரம்தாழ்த்தி தமக்கருள் செய்திட வேண்டும் என்று பணிந்தமையால் நீள்ஒளியாக நின்ற அக்கினித் தம்பம் குளிர்ந்து மலையாகியது. ஓளி (அருண்) நிலைப்பெற்றது (அசலம்) என்னும் பொருளில் அருண ூ அசலம் ஸ்ரீ அருணாசலம் என்று அழைக்கப்பட்டது. உண்ணாமுலையாள் உடன் அருணாசலேசுவரர் கோயில் கொண்டுள்ள இப்புனிதமலை இன்று திருவண்ணாமலை என வழங்கி வருகிறது.

ஆதி நெடுமால் அரிஅயன்காண அன்று பரஞ் சோதிச் செழுங்சுடராய்த் தோன்றுமலை – வேதம் முழங்குமலை சிந்திப்பார் முன்னின்று முத்தி வழங்குமலை அண்ணாமலை சக்திக்கு ஒருபாகம் தான் கொடுத்து நின்றமலை முத்திக்கு வித்தாய் முளைத்தமலை – எத்திசையும் போற்றுமலை போற்றிப் புகழ்வார் – எழுபிறப்பை மாற்றுமலை அண்ணாமலை – குருநம்சிவாயர்

சிவராத்திரி குறித்த மாணிக்கவாசகரின் திருவாசக மொழிகள் சில
திருச்சாழல்

அலரவனும் மாலவனும் அறியாமே அழல்உரு ஆய் நிலம் முதல் கீழ் அண்டம் உற நின்றதுதான் ஏன்ஏடீ நிலம்முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம் சலம்முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ

திருத்தோணேக்கம்

பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க அரனார் அழல்உரு ஆய் ஆங்கே அளவு இறந்து பரம்ஆகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ 3