செய்திகள்

உள்நோக்குடன் செயல்படுகிறது சிபிஐ: தயாநிதி குற்றச்சாட்டு

அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐ செயல்படுவதாக முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். |

சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி.கவுதமன் உட்பட மூன்று பேர் நேற்றிரவு சிபிஐ அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை, தயாநிதி மாறன் திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “சிபிஐ, அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. சிபிஐ குற்றங்களைக் கண்டுபிடிக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர குற்றங்களை சுமத்தும் அமைப்பாக இருக்கக்கூடாது.

8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடமும் கடந்த 18 மாதங்களாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அவர்களும் விசாரணைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வந்தனர்.

ஆனால், அவர்களை கைது செய்ததோடு சிபிஐ என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளுமாறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவருக்கு ஆதரவாக செயல்படும் வகையில், அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐ அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக சிபிஐக்கு கடிதம் எழுதப்படும்” என்றார் தயாநிதி மாறன்.