செய்திகள்

உள்ளக பொறிமுறை இதுவரை அமைக்கப்படவில்லை: ஐ.நா. நிபுணரிடம் சிவில் சமூகம்

இலங்கை அரசாங்கம் உறுதியளித்தது போல உள்ளகப் பொறிமுறை ஒன்று இதுவரையில் அமைக்கப்படவில்லை என உண்மை மற்றும் நீதிக்கான ஐ. நாவின் சிறப்பு அறிக்கையாளர் (UN Special Rapporteur on the Promotion of Truth, Justice, Reparation and Guarantees of Non-Recurrence) பப்லோ டி க்ரீபிடம் (Pablo de Grieff) சிவில் சமூக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இன்று காலை கிளிநொச்சியில் நடத்திய சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையமும் கலந்து கொண்டது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஐ. நா சிறப்பு அறிக்கையாளரிடம் விஷேட அறிக்கை ஒன்றையும் அமையம் கையளித்தது. அந்த அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு:

ஐ. நா மனித உரிமை ஆணையாளர் கடந்த மார்ச் 5, 2015 அன்று ஜெனீவாவில் ஆற்றிய உரையில் பாதிக்கப்பட்ட நபர்களோடு கலந்தாலோசித்தே ஓர் உள்ளகப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாலும் இலங்கை அரசாங்கம் இது வரையிலும் அத்தகைய ஓர் கலந்தாய்வுச் செயன்முறையை ஆரம்பிக்கவில்லை என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

அண்மையில் பாராளுமன்றிலும் வேறு உத்தியோகபூர்வத் தளங்களிலும் இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளி விவகார அமைச்சர் உள்ளக விசாரணையின் நோக்கம் இலங்கை இராணுவத்தின் நற்பெயரைக் காபாற்றுவதற்கே என்று குறிப்பிடப் பட்டுள்ளமையை ஆதரங்களுடன் சுட்டிக்காட்டி இவை உண்மையான நம்பத்தகுந்த விசாரணையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு விருப்பம் இல்லை என்பதையும் ஆகவே தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் கீழும் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதை தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

அண்மையில் இலங்கை பிரதமர் யாழ்ப்பணத்தில் ஆற்றிய உரையில் ஓர் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பதே எமது நோக்கம் எனக் கூறியுள்ளமை குற்றம் செய்தவர்கள் தொடர்பில் குற்ற விசாரணை மற்றும் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே காட்டுகின்றது என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் இலங்கையில் உள்ளக விசாரணை ஒன்று ஏன் ஒரு போதும் வெற்றியளிக்காமைக்கான வராலாற்று ரீதியான காரணிகளையும் அறிக்கை எடுத்தியம்புகின்றது.

மீள மீள உள்ளகப் பொறிமுறைகள் நீதியைப் பெற்றுத் தர முடியாதவை என தமிழ் மக்கள் எவ்வளவு தடவை தான் சரவதேச முறைமைக்கு நிரூபிக்க வேண்டும் என்று கேள்வியை சிவில் சமூக அமையத்தின் அறிக்கை முன் வைத்துள்ளது.

நிலைமாறு நீதிக்கான (Transitional Justice) செயற்திட்டத்தின் முக்கிய அம்சம் நிறுவன மறுசீரமைப்பு என்பதை சுட்டிக் காட்டியுள்ள அமையத்தின் அறிக்கை இலங்கையின் ஒற்றையாட்சி அரசு மறு சீரமைக்கப்படாத வரை இந்த நிறுவன மறுசீரமைப்பு பூர்த்தியாகாது என்றும் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.