செய்திகள்

உள்ளுராட்சி தேர்தல் திருத்தத்தின் பிரகாரம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 595ஆல் அதிகரித்தது

உள்ளுராட்சி நிறுவன தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணய செயற்பாடுகளின் போது, நாடு பூராகவும் உள்ள உள்ளுராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 595ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னர் அமுலில் இருந்த தேர்தல் முறைமைக்கு அமைய 4 ஆயிரத்து 486 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். புதிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு அமைய தொகுதி முறைமையின் கீழ் தெரிவு செய்யப்படும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 81 ஆகும்.
இதன்படி மேல் மாகாண கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி மன்றங்களுக்காக, புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைய 329 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்
கம்பஹா மாவட்டத்தில் 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 417 உறுப்பினர்களும், களுத்துறை மாவட்டத்திற்காக 277 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தின் 22 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 327 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மாத்தளை மாவட்ட புதிய தொகுதி பிரிவிற்கு அமைய 168 உறுப்பினர்களும் நுவரஎலிய மாவட்டத்திற்கு 186 உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
வட மாகாண யாழ்ப்பாண மாவட்டத்தின் 237 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 40 உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தில் 46 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அத்துடன், வவுனியா மாவட்டத்தில் 63 உறுப்பினர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 41 உறுப்பினர்களும், புதிய எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு அமைய தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 146 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
20 உள்ளுராட்சி மன்றங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்திற்காக மொத்தமாக 221 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 136 உறுப்பினர்கள் புதிய எல்லை நிர்ணய குழு அறிக்கைக்கு அமைய தெரிவு செய்யப்படவுள்ளனர்.