செய்திகள்

ஊழல் புகார் உள்ள லலித் மோடிக்கு உதவியதால் சுஷ்மா மீது மோடி அதிருப்தி: காங்கிரஸ் பதவிவிலக வலியுறுத்து

முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியும் ஊழல் புகாரில் சிக்கி, பின்னர் லண்டனுக்கு தப்பி ஓடியிருந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்த விவகாரம் விஸ்வரூபம் அவருக்கு உதவி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை பிரதமர் நரேந்திர மோடியை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் நரேந்திர மோடி விசாரித்து வருவதாகவும், அவரிடம் சுஷ்மா விளக்கம் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், மனிதாபிமான அடிப்பையில்தான் தான் லலித் மோடிக்கு உதவி செய்ததாக சுஷ்மா டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, இந்தியாவில் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை சந்திக்க முடியாமல் லண்டனுக்குப் போய் வசித்து வருகிறார் லலித் மோடி. அவருக்கு பாஜக தரப்பிலிருந்து ஆதரவு கிடைத்திருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் லலித் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லலித் மோடியின் மனைவிக்கு போர்த்துக்கல் நாட்டில் சிகிற்சை நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்பி சுஷ்மாவின் உதவியை நாடியதாக தெரிகிறது. இதையடுத்து இங்கிலாந்து எம்.பியும் இந்திய பூர்வீகம் கொண்டவருமான கீத் வாஸுடன் தொடர்புகொண்ட பேசிய சுஷ்மா, லலித் மோடி இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்பினால் அதை இங்கிலாந்து அரசு அனுமதிக்கலாம் என்றும் அதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் வெளியாகி தற்போது சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டிவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சுஷ்மா. அதில், 2014ம் ஆண்டு ஜூலை மாதம் என்னிடம் பேசினார் லலித் மோடி. அப்போது தனது மனைவிக்கு புற்றுநோய் தொடர்பாகவும் போர்த்துக்கல்லில் ஆகஸ்ட் 4ம் திகதி சத்திர சிகிற்சை செய்ய இருப்பதாகவும் கூறினார். இதன்போது மனைவியுடன் இருக்க விரும்புவதாகவும், இதற்கு தனக்கு அனுமதி தேவை என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து அவருக்கு சுற்றுலா அனுமதியை வழங்க விதிமுறைப்படி இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று நான் மனிதாபிமான அடிப்படையில் பரிந்துரைத்தேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா.

இந்த விவகாரம் தற்போது பிரதமர் மோடி வரை வந்துள்ளது. அவர் இதுகுறித்து சுஷ்மாவிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு சுஷ்மா என்ன விளக்கம் கொடுத்தார் என்று தெரியவில்லை.

இதேவளை, சுஷ்மா பதவி விலக காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது வலியுறுத்தியுள்ளார். ” சுஷ்மா மீதான புகார் உண்மையாக இருக்குமானால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரினார்.