செய்திகள்

ஊழல், மோசடி ஆவணங்கள் கையளிப்பு: ஜே.வி.பி. நடவடிக்கை

கடந்த அரசாங்கத்தின் காலங்களில் கிடைத்த பாரியளவிலான ஊழல், மோசடிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் பல புதிய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் மாகாண சபை உறுப்பினரும் ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளருமான வசந்த சமரசிங்க ஆகியோரினால் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகத்துடன் இணைந்ததாக அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு செயலகத்தின் அதிகாரிகளிடம் இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு 20 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான ஊழல், மோசடி ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் கிரிக்கெட் சபை, மில்கோ நிறுவனம், தேசிய லொத்தர் சபை, நீர்விநியோக சபை, விளையாட்டுத்துறை அமைச்சு, அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, எப்பாவெல பொஸ்பேட் நிறுவனம், கல்வி அமைச்சு, மின்சார சபை, பேலியகொடை மீன் சந்தை, தலதாமாளிகை, ரெலிக்கொம் நிறுவனம் ஆகியன தொடர்பான ஆவணங்களும் அரச அடகு மற்றும் முதலீட்டு வங்கித் தலைவர் ஜகத் வெல்லவத்த, ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுத் தலைவர், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சஜின்வாஸ் எம்.பி. ஆகியோர் தொடர்பான ஆவணங்களும் அடங்குவதாக ஜே.வி.பி. ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.