செய்திகள்

எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் அரசு தலைமை வழக்கறிஞர் பலி

எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் அரசு தலைமை வழக்கறிஞர் கொல்லப்பட்டார்.
அரசு சார்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வரும் தலைமை வழக்கறிஞர் ஹிஷாம் பரக்கத் (வயது 65) இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்றபோது அவரைக் குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதச்செய்து வெடிக்கச் செய்தனர்.

இதில் பலத்த காயமடைந்த ஹிஷாம் பரக்கத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசர வார்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக சுமார் ஆயிரம் இஸ்லாமியர்களை தலைமை வழக்கறிஞர் ஹிஷாம் பரக்கத் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். இந்த வழக்குகளை சந்தித்தவர்களில் 6 தீவிரவாதிகள் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டனர். இதையடுத்து, அந்நாட்டு நீதித்துறை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு எகிப்தில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.