செய்திகள்

எங்கே போகின்றோம்?

சமீபகாலமாக எமது சமூக சூழல் எவ்வாறு மோசமான நிலையை அடைந்து வருகின்றது என்பதை பத்திரிகை படிப்பவர்கள் அறிவார்கள். பத்திரிகையில் வராத எமது கிடுகு வேலி கலாச்சாரத்தின் பின்னால் மறைக்கப்படுபவை அதிகம்.
களவு.கொள்ளை.வாள்வெட்டு.கொலை.பாலியல் வல்லுறவு என சமூகத்தால் புறமொதுக்கப்படவேண்டிய பல்வேறு விடயங்கள் மிகச் சாதாரணமாக இங்கு அரங்கேறுகின்றன இது எம்மை பிடித்துள்ள ஒருவகை சமுக பெரும் நோய் என்றே குறிப்பிடலாம்.
அதலும் குறிப்பாக இந்த நோயின் தாக்கம் நாம் முற்று முழுதாக நம்பியிருக்கும் இளம் தலைமுறையினரை தாக்குகின்றது என்பதை கவனத்தில் கொள்வோம்.
சமகால தொழில்நுட்ப வளர்ச்சியினால் தொலைபேசி கணினி வழி மூலம் மேம்பட்ட ஈமெயில்.பேஸ்புக் வசதிகள் முறுக்கப்படும் மோட்டார்சைக்கில்கள். வழுக்கிச் செல்லும் காப்பெட் பாதைகள். ரின்களில் வசதியாக கிடைக்கும் குடிபான வகைகள்இன்றைய இளம் தலைமுறையினரை தலை தெறிக்க வைக்கின்றன.
குறிச்சிக்கு குறிச்சி ஊருக்கு ஊர் என வியாபித்து விஸ்பரூபம் எடுத்திருக்கும் இந்த செயற்பாடுகளின் முடிவுதான் என்ன? நாங்கள் எங்கே போகின்றோம் அல்லது எங்கே போய் நிற்கப்போகின்றோம்.
எப்படி வெல்லமுடியும் என்று உலகுக்கு காட்டிய நாங்களே எப்படி தோற்க முடியும் என்பதையும் காட்டிவிட்டு பாத்தீனியம் செடியைப்போல சகல அடக்கு முறைகளையும் அடுப்புக்கோடி வரை பரவ விட்டுள்ளோம்.
அதனால் தான் யாருமேஇத்தகைய சமூகச் சீர்கேட்டை . சமூகசீரழிவை தடுக்கமுடியாத கையறு நிலையில் உள்ளோம்.
இவ்வளவு நிலைவந்த பிறகும் எதையும் எதிர்கொள்ளமுடியாத ஒருவகை அரசியல் தலைமைதான் எமக்கு மிச்சமாக உள்ளது.
sam-26

மேளம் அடித்து மாலை போட்டு பாராட்டும் பாராட்டு விழாக்களும் அல்லது கௌரவிக்கப்படும் ஏனைய விழாக்களிலும் பங்குபற்றுவதோடு தமது அணிக்கு ஆட் சேர்ப்பதிலும் இப்போதைய பதவிகளை தக்கவைத்துக் கொண்டு அடுத்த பதவிக்கு குறிவைத்து செயற்படுவதிலும் அரசியல் தலைமைகள் போட்டிபோடும்போது சமூகத்தை பிடித்துள்ள இத்தகைய கொடூர நோயை நீக்கும் கைங்கரியத்தை யார் பார்க்கப் போகின்றனர்.
வெற்றி பெற்றால் கோசம் போடவும் தோல்வி கிடைத்தால் ஒதுங்கி இருக்கவும் எமது மக்களை பழக்கப்படுத்தி விட்டோம்.
இன்று உள்ள இளம் தலைமுறைக்கு கடந்தகால எங்கள் வாழ்க்கையின் வலி தெரியாது வசதி உள்ளவர்களுக்கும் வாய்புள்ளவர்களுக்கும் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை அப்படி பிரச்சனைகள் இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள்ள செல்வாக்குகள் மூலம் அவற்றிற்கான தீர்வுகளை கண்டுகொள்கின்றனர்.
ஆனால் வசதிவாய்ப்புக்கள் அற்ற பொருண்மிய வளம் இல்லாத மக்கள்தான் சொந்தக் காணியையும் சொந்த வீட்டையும் இழந்து அல்லற் படுகின்றனர்.
அரசியல்ப்படுத்தாத மக்களை வைத்துக்கொண்டு தங்கள் பதவிகளை மாத்திரம் காப்பாற்ற செயற்படும் அரசியல் தலைமைகள் இத்தகைய பிரச்சனைகளிற்கு தீர்வுகாண முடியாமல் உள்ளன என்பது மாத்திரமல்ல தீர்க்கவேண்டுமென்ற அக்கறையும் அவர்களிற்கு இல்லை.
இத்தகைய சூழ்நிலையில் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள இப்பிரச்சனைகளிற்கு யார்தான் தீர்வு காணுவது?
அரசியலை விட்டால் எங்கள் மத்தியில் எத்தனை சமூக அமைப்புக்கள் உள்ளன? சமூக நிறுவனங்கள் .கோயில்கள் இருக்கின்றன இவற்றில் அங்கம் வகிக்கும் ஊர் பிரமுகர்களும் உள்ளனர். இவர்களும் இந்த சமூகத்தில் வாழ்வதால் இவர்களிற்கும் இது தொடர்பான அக்கறை வரவேண்டும்.
ஆனால் சமய விழாக்கள் சமூக விழாக்கள் பாராட்டு விழாக்கள் என்று எங்கள் சமூக சமய நிறுனங்கள் லட்சக்கணக்கான ரூபாக்களை செலவு செய்கின்றன. சிலவேளை அது கோடிகளை கூட தொடுகின்றன.
இந்த விழாக்களில் ஊர் பிரமுகர்களான பல்வேறு தரத்தை சேர்ந்த அறிஞர்கள் பெரும் பதவி வகிப்போர் பெரும் வர்த்தகர்கள் மேடைஏறிப்பேசுவதோடும் கழுத்தில் மாலைகளை வாங்குவதோடும் தம் பணியை முடித்துக்கொள்கின்றனர் . இதனால் இந்த சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைதான் என்ன?
சமூக ரீதியான சிந்தனை இல்லாமல் எந்த நிறுவனமோ எந்த அமைப்போ மதத்தலங்களோ இருக்க முடியாது.
sam-27

பொது வேலைகளில் தங்களை பக்திபூர்வமாக காட்டி செயற்படுகின்ற ஒருசிலர் தான் பியரை குடித்துவிட்டு பின் பியர் ரின்களை சொப்பின் பாக்குகளில் கட்டி ஒழுங்கைக்கு ஒழுங்கை போட்டு விடுகின்றனர். சில வேளைகளில் வாள்களை துாக்கிக்கொண்டு சண்டித்தனமும் செய்கின்றனர்.
இங்கே யாரையும் குற்றம் சொல்ல வேண்டிய தேவை இல்லை எல்லோருக்குமான சமூகப் பொறுப்பை நாங்கள்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.எங்களிடம் உள்ள எந்த அமைப்போ சமயத்தலமோ எந்த நிறுவனமோ அவற்றின் வேர்கள் இந்த மண்ணின் அடி ஆழத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன.
லட்சம் லட்சமாக கோடி கோடியாக செலவழித்து விழாக்கள் செய்து சர்வதேச பிரபலங்களை அழைத்து வந்து நாங்கள் ஆடி மகிழலாம். ஆனால் சமூகத்தின் ஊனம் சீழாக வடிந்துகொண்டிருக்கும் போது இவ்வாறு நடந்து கொண்டால் எப்படி அதனை ஏற்றுக்கொள்ள முடியும்?

Related News