செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழருக்கு வழங்கக் கூடாது என தடுப்பவர்கள் எப்படி அரசியல் தீர்வு வழங்க முன்வருவார்கள்? (படங்கள்)

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழருக்கு வழங்கக் கூடாது என தடுக்கும் பேரினவாதம் எப்படி வடகிழக்கு அரசியல் தீர்வு வழங்க முன்வருவார்கள் என்பதை தமிழ் மக்களாகிய நாம் சிந்திக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை அதிபர் சு.ரவிசங்கர் தலைமையில் இடம்பெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாராளுமன்றத்தில் தற்போது தேசிய அரசாங்கம் அமைந்துள்ளதாக ஒருசாரார் கூறுகின்றனர். இன்னுமொரு சாரார் நல்லாட்சி இடம்பெறுவதாக கூறுகின்றனர்

என்னைப்பொறுத்தமட்டில் இந்த இரண்டு ஆட்சிகளும் இங்கில்லை. தேசிய அரசாங்கமெனில் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி இருக்கத் தேவையில்லை நல்லாட்சியெனில் கடந்த அரசில் ஊழல் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட பெயர்வழிகள் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு நல்லாட்சி என்று கருத முடியும்.

பாராளுமன்றத்தில் ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்த பொதுசன ஐக்கிய முன்னணியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிஉறுப்பினர்கள் சுமார் 28 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த எதிர்க்கட்சி நிலையில் இருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான். அவ்வாறாயின் எதிர்க்கட்சிப் பதவி சம்பந்தன் ஐயாவுக்கே தார்மீக ரீதியாக சபாநாயகரால் அறிவிக்கப்படவேண்டும்.

ஆனால் “சம்பந்தன்” என்ற பெயர் “சம்பிக்க” என இருக்குமானால் சிலவேளைகளில் இனவாதிகள் ஏற்றுக்கொண்டிருப்பர். சம்பந்தர் தமிழர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கவிடாமல் தடுப்பதற்காக இப்போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனாவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை இனவாத பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச உட்பட பலர் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறான செயல் பாராளுமன்ற நடைமுறைக்கு முற்றிலும் முரனான செயல், எதிர்கட்சித் தலைவர் என்பது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் பல கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால் அடுத்த நிலையில் எதிர்தரப்பில் கூடிய உறுப்பினர்களை எந்தக்கட்சி வைத்தள்ளதோ அது எதிர்க்கட்சி அந்தஷ்தை தானாக பெறும். அவ்வாறு தற்போது இருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே 13 ஆசனங்களை கொண்ட கட்சியாகும். இதன் முடிவு எதிர்வரும் ஏப்ரல்7ம் திகதி எதிர்பார்கின்றோம்.

பாராளுமன்ற நடைமுறையை இனவாதம் மாற்ற முயல்வதை காணமுடிகிறது எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது சலுகைகள் அடிப்படையில் செல்வாக்கு அடிப்படையில் தீர்மானிப்பதில்லை, நடைமுறையில் வழங்கப்படுகின்ற பாராளுமன்ற சிறப்புரிமையே எதிர்க்கட்சி தலைவர் பதவியாகும். இதற்கு கையொப்பங்கள் வைத்து பெரும்பான்மையை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பெரும்பான்மையை காட்டி எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படுமானால் அது ”எதிர்க்கட்சி தலைவர்” என்ற பதவியை “எதிர்த்தரப்பு தலைவர்” என சபாநாயகர் மாற்றம் செய்ததாக கருத வேண்டியநிலை ஏற்படும்.

ஒரு எதிர்கட்சி தலைவர்பதவி தமிழருக்கு வழங்ககூடாது என தடுக்கும் பேரினவாதம் எப்படி வடகிழக்கு அரசியல் தீர்வு வழங்க முன்வருவார்கள் என்பதை தமிழ் மக்களாகிய நாம் சிந்தித்து தமிழரின் அரசியல் பலத்தை உறுதி செய்ய எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து எமது பலத்தை நிருபிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்.

20150402_135813

20150402_141544

20150402_142818

20150402_153612

20150402_172333

20150402_154323

20150402_160236

20150402_171807