செய்திகள்

என்ன நடக்கிறது நடிகர் சங்கத்தில்: நாசர் ஆவேசம்

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஷால் சென்னையில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக உயிருள்ளவரை போராடுவேன் என்றும்,இதற்காக நடிகர் சங்க தேர்தலிலும் போட்டியிட தயார் என்று கூறியிருந்தார். விஷாலின் பேச்சு குறித்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறுகையில், எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது. நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும் என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகர் நாசர் சரத்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விஷால் புதுக்கோட்டை நடிகர் சங்கத்தில் பேசிய பேச்சின் தொடர்பாக தாங்கள் வரைந்த அறிக்கையை படிக்க நேர்ந்தது. ஒரே கேள்விதான் எழுகிறது? “என்ன நடக்கிறது சங்கத்தில்”

சில உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் மீது கீழ்த்தரமான வார்த்தைகள் நிரம்பிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்கள். நியாயமான முறையில் சந்தேகங்களை எழுப்பியவர்களுக்கு மிரட்டலும் அவலமும் கலந்த மொட்டை கடிதாசிகள் வருகின்றன. தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கு முன்னரே துணைத்தலைவர் திருச்சியில் கூட்டம் கூட்டி தேர்தல் பற்றி பேசியதுமல்லாமல் ஒட்டு மொத்தமாக சினிமா நடிகர்களை மானமற்ற நாய்கள் என்கிறார்.

பொதுச் செயலாளரோ சங்கத்தை பிளக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார். இவர் இருவரின் செய்கையின் புகார் கொடுத்து பதில் வராததால் பக்கம் பக்கமாய் மீண்டும் எழுதியதால் காரணம் ஏதும் விளக்கப்படாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமென செயற்குழு எடுத்த முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு தங்கள் கையொப்பமிட்ட பதில் வருகிறது.

துணைத்தலைவர், பொதுச் செயலாளர் மீது நான் கொடுத்த புகாரின் பேரில் நீங்கள் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடில்லை. அதற்க நான் ஏன் பதிலளிக்கவில்லையென்றால் சில செயற்குழு உறுப்பினர்களின் தேவையற்ற கட்டுக்கதைகளும், அவதூறுகளும், மூன்றாம் தர வாக்கியங்கள் ப்ரயோகித்ததின் காரணமாகத்தான். பிடிக்காதவர்களின் மீது அற்பத்தனமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு நிலைகுலைய செய்யலாமென்று அவர்கள் நினைத்தால் அது நடக்காதென்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.

விஷால் புதுக்கோட்டையில் பேசியதை கண்டித்து இன்று தங்கள் அறிக்கை வந்திருக்கிறது. புதுக்கோட்டையில் எழுபதுற்கும் மேற்பட்ட கலந்து கொண்ட நாடக நடிகர்களை வாக்கில்லாதவர்கள் என்று குறிப்பிடுவது தேர்தல் கவலையோடு என்பதை நான் உணர்கிறேன். ஒரு உறுப்பினர் சங்க நிர்வாகிகளின் கருத்துக்கு மாறுபட்டு செயல்பட்டால் அவரிடம் விளக்கம் கேட்டு விசாரித்து நடவடிக்கை எடுப்பதுதான் முறையென்று நான் நினைக்கிறேன். பத்திரிகை அறிக்கை மூலமாக எச்சரிப்பது புதிய அணுகுமுறையாக இருக்கிறது.

யார் யாரையும் பழித்தும் இழித்தும் பேசலாம். நடவடிக்கைகள் எடுக்கப்படாது ஆனால் நிர்வாகம் தன்னை காத்துக்கொள்ள அறிக்கைகள் மட்டும் விடும். ஐயா சில மாதங்களுக்கு முன் நடந்தேறிய சிறப்பு செயற்குழு கூட்டத்தில் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதே சிறப்பு கூட்டத்தில் ‘தை மாதத்திற்குள் வழக்கு முடிவுக்கு வரும் அப்படியில்லாவிட்டால் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு எல்லோரையும் கலந்தாலோசித்து புதுக்கட்டிடம் துவங்கப்படும்” என்று செயற்குழு உறுப்பினர்களும் மற்ற நிர்வாகிகளும் கரவொலி எழுப்ப அறிவித்தீர்கள். இன்று தை கடந்து வைகாசியும் முடியப்போகிறது. எப்போது கூடப்போகிறோம், எங்கே கலந்தாலோசிக்கப் போகிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.