செய்திகள்

எமது பயணம்

இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை கடந்த ஐந்து தசாப்த காலத்தில் பல படி நிலைகளை கடந்துவந்துள்ளது.ஒடுக்குமுறைக்கு எதிராக அகிம்சைவழியிலும்,ஆயுதரீதீயாகவும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது,யுத்த நிறுத்த உடன்படிக்கைகள்,தீவிரபேச்சுவார்த்தைகள்,என்ற வகையில் சர்வதேசத்தின் தலையீடுகளையும் சந்தித்த பின்னர் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து, பாரிய முழுமையான யுத்தம், பெருமளவு உயிரிழப்புகள்,ஆயுத போராட்டம் முடிவிற்கு வருதல் போன்றவையும் நிகழ்ந்துள்ளன.

மிகப்பெரும் விலையை செலுத்தி, பாரிய உயிரிழப்புகளுக்கு மத்தியில் கசப்பான பல உண்மைகளை நாங்கள் உணர்ந்துள்ளோம். இது தமிழர்கள் சுயகௌரவத்துடனும், சமத்துவமாகவும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவசியமான எதிர்காலத்தை உருவாக்குவதில் உள்ள சவால்கள், மற்றும் நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்கான தளத்தினை உருவாக்கியுள்ளது. இந்த விடயத்தில் தனக்குள்ள பொறுப்புணர்வு குறித்து உணர்ந்துள்ள சமகளம் அதற்காக தீவிர பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளது.

கௌரவமான, வலுவான,சமூக அநீதிகள் மற்றும் சமத்துவமின்மையிலிருந்து விடுபட்ட, இலங்கைத் தீவில் தனது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நல்வாழ்வை உறுதிப்படுத்தகூடிய தமிழ்தேசமொன்று குறித்து கனவு காணும் நாம், தகவல் மற்றும் அறிவுப்பரிமாற்றத்தின் ஊடாக நேர்மையான, இதயசுத்தியுடனான கருத்துருவாக்கத்தில் ஈடுபட விரும்புகின்றோம்.

இலங்கையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள், இலங்கை, இந்தியஅரசியல் மற்றும்,புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் விமர்சனத்துடன் கூடிய மதிப்பீடுகளையும், ஆய்வுகளையும் முன்னெடுப்போம்.

தமிழ் மக்களின் சமூக, பொருளாதரா, அரசியல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க கூடிய சிந்தனைத் தெளிவை ஏற்படுத்த உதவும் நேர்மையான கருத்துபரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் மாற்றுக்கருத்துகளுக்கும் நாங்கள் இடமளிப்போம். தமிழ்மக்களை வலுப்படுத்தகூடிய பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார தகவல் ஊடகமாக இது விளங்கும்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக சமகளம் தமிழ்அரசியல்வாதிகள்,இராஜதந்திரிகள்,கொள்கை வகுப்பாளர்கள்,புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மற்றும்,ஊடகவியலாளர்களை சென்றடைவதுடன் அவர்களது கருத்துக்களுக்கும் இடமளிக்கும். தகவல் மற்றும் அறிவை விஸ்தரிப்பதற்கான எமது தளம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ளதகுதிவாய்ந்த, அனுபமிக்க ஊடகவியாலர்கள், கல்விமான்கள் ,துறைசார் நிபுணர்களிடமிருந்து செய்திகள்,ஆய்வுக்கட்டுரைகள், வீடியோக்கள் ,போன்றவற்றை உங்களுக்கு வழங்கும்.

இந்த சவால் மிகுந்த முக்கிய பணியில், பயணத்தில்,எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். எமது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குவோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கின்றோம்.

இந்த முக்கியமான தருணத்தில் எமது போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருகின்றோம்.

Related News