செய்திகள்

எம்.பிக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவகையில் விசாரணை : இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உறுதியளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கும்போது அவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையிலான முறைமையொன்றை பின்பற்றுவதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் பாலபடவெதி தெரிவித்துள்ளார். நேற்று மாலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆணைக்குழு தலைவரை அழைத்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாரளுமன்ற எம்.பிக்களை விசாரணைக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கும் போது அங்கு ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் இதனால் எம்.பிக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரை அழைத்து சபாநாயகர் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது எம்.பிக்களை விசாரணைக்கு அழைக்கும் வேளையில் அவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையிலான முறையொன்றை பின்பற்றுவதாக ஆணைக்குழுவின் தலைவர் பாலபடவெதி  தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.