செய்திகள்

எல்லா பிரதேசங்களிலும் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டும்: அடைக்கலநாதன்

வடக்கில் அனைத்து பிரதேசங்களிலும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை புதிய அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் 1000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக பாரிய அளவில் பிரசாரம் செய்திருந்தது.

இதன் பிரகாரம் இந்த அரசில் தமிழ் மக்கள் அதிகளவான நம்பிக்கையை வைத்திருந்தனர். இது மாத்திரமின்றி மீள்குடியேற்ற அமைச்சராக தமிழரொருவர் நியமிக்கப்பட்டமையையும் நல்லதொரு சமிக்ஞையானவே நோக்கியிருந்தனர்.

இந் நிலையில் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பதாக தெரிவித்த அரசு அந்த வாக்குறுதியை ஆக்கபூர்வமாக செயற்படுத்தவில்லை என்ற ஏக்கம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

குறிப்பாக வன்னிப்பிரதேசத்தில் வவனியாவில் பேயாடிகூழாங்குளம், ஓமந்தை இறம்பைக்குளம், மன்னார் முள்ளிக்குளம் போன்ற பகுதிகளுடன் முல்லைத்தீவிலும் பேப்பாபிலவிலும் மக்கள் வாழ்ந்த பல இடங்கள் இன்றும் இராணுவ ஆக்கிரமிப்பிலேயே உள்ளது.

எனினும் இவ் அரசு இப் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பில் கரிசனை கொள்வதாக தெரியவில்லை. இதன் காரணமாக வவுனியா, மன்னார். முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளான காணிகளின் உரிமையாளர்கள் இன்றும் இடம்பெயர்தவர்களாக காணி வீடற்றவர்களாகவே வாழ்வது வேதனைக்குரியது.

எனவே மைத்திரிபால தலைமையிலான அரசு இராணுவ ஆக்கிரமப்பில் உள்ள காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டை ஆக்கபூர்வமாக செயற்படுத்தவேண்டியதுடன் வன்னி பிரதேசத்தில் உள்ள காணிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.