செய்திகள்

யேமன் நாட்டில் சமாதான பேச்சுக்கு கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை

யேமன் நாட்டில் சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, அனைத்து வகையிலான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

ஏமன் நாட்டில், அதிபரை ஓட வைத்து, முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன.

இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி வான்தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்த தாக்குதல்களில் 900-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல்களை, ஏமன் அதிபர் கேட்டுக்கொண்டதின்பேரில், நிறுத்திக்கொள்வதாக சவுதி கூட்டுப்படைகள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டன.

சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும், அந்த அச்சுறுத்தலை அகற்றுவதற்காகத்தான் தாக்குதல்கள் தொடுத்ததாகவும், தங்கள் நோக்கம் நிறைவேறி விட்டதாகவும் சவுதி கூட்டுப்படைகள் கூறின. ஏமன் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வந்தாலும் கூட, கடற்படையின் முற்றுகை தொடரும். ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.

ஆனால் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள், டாய்ஸ் நகரில் ஏமன் ராணுவத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் தொடுத்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் மீண்டும் வான் தாக்குதல்கள் நடத்தின.

ஏமனில் தாக்குதல்களை மீண்டும் சவுதி கூட்டுப்படைகள் தொடங்கி விட்டனவா அல்லது இது ஒரு குறுகிய கால நடவடிக்கையா என தெரியவில்லை. இதற்கிடையே கடந்த மாதம் 26-ந் தேதி ஏடன் நகருக்கு அருகே ஒரு விமான தளத்தில் வைத்து பிடித்து தங்கள் வசம் வைத்திருந்த ஏமன் ராணுவ மந்திரி மகமது அல் சுபாய்யை கிளர்ச்சியாளர்கள் சனாவில் விடுதலை செய்தனர். அவரை கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. கோரிக்கை விடுத்தது நினைவுகூரத்தகுந்தது.

இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம், “ஏமன் விவகாரத்தில் ஐ.நா. ஆதரவுடன் கூடிய அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஆனால் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டபின்னர்தான் பேச்சு வார்த்தை” என கூறி உள்ளார். இதற்கு முன்பு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் அப்து ரபு மன்சூர் ஹாதி அரசுக்கும் இடையே கடந்த ஜனவரியில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.