செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணையப் புறப்பட்ட இருவர் கட்டுநாயக்காவில் கைது

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்குச் செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் வந்த மூன்று மாலைதீவு பிரஜைகள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

25, 23 வயதுடைய இரண்டு ஆண்களும், 18 வயதுடைய ஒரு பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்களாவர். இவர்கள் நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் ஒருவழிப் பயணச்சீட்டு மாத்திரமே இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ தேவைக்காக துருக்கி செல்வதாக இவர்கள் சிறிலங்கா அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்காக சிரியா செல்ல முயன்ற ஜிகாதிகள் என்று மாலைதீவு அரசாங்கம் கூறியுள்ளது. மாலைதீவு உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து செல்லும் ஜிகாதிகள், ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் இடைத்தங்கல் நிலையமாக கட்டுநாயக்க விமான நிலையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்காவும் இந்தியாவும் குற்றம்சாட்டி வந்தன.

இந்த நிலையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இச்செய்தியை மாலைதீவு அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.