செய்திகள்

ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவான 32 இணையத்தளங்கள் முடக்கம்: இந்திய அரசு அதிரடி

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாகவும் அந்த இயக்கத்துக்கு ஆள்சேர்க்கவும் வழிவகுத்து வந்த 32 இணையதளங்களை இந்திய மத்திய அரசு முடக்கியுள்ளது.

ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவான மற்றும் இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையான வாசகங்கள் இடம்பெறும் இணையதளங்களை கண்டுபிடித்து அதனை தடை செய்யும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்ப்பதற்காகவும் இந்த தளங்கள் செயல்பட்டு வந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ-வின் கீழ் 32 இணையதளங்கள் இன்று வியாழக்கிழமை முதல் முடக்கப்பட்டதாக கணினி அவசர நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்ட 32 இணையதளங்களின் முகவரிகளை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புக் குழு பரிந்துரை செய்ததாக பெங்களூருவில் செயல்படும் இணைய மற்றும் சமூகத்தின் மைய இயக்குனர் பிரனேஷ் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் முடக்கப்பட்ட அந்த 32 இணையதளங்களின் பட்டியலையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.