செய்திகள்

ஐ.தே.க சதி செய்கிறது: மஹிந்த

உள்ளூராட்சி மன்றங்களைக் கலைத்து அவற்றை விஷேட ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதரஷன யாப்பா மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2011ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, ஆட்சிக்கு வந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் காலம் இம் மாதம் 30 திகதியுடன் நிறைவடையவுள்ளது.

எனினும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான காலத்தை நீடித்து, பொதுத் தேர்தலின் பின்னர் அவற்றை நடத்த அப்போது கட்சி தீர்மானித்தது.

இந்தநிலையில் குறித்த இந்தத் தீர்மானத்திற்கு மாறாக உள்ளூராட்சி மன்றங்களைக் கலைத்து அவற்றை விஷேட ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி சதி செய்வதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கு ஏற்பாடாகியுள்ள இந்த நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள 278 உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக இது அமையும்.

இது சிறிகொத்தவினால் மேற்கொள்ளப்படும் சதியாயின், நியமிக்கப்படும் விஷேட ஆணையாளர் அவர்களின் விருப்பதிற்குரியவராக இருப்பார் என எனக்கு தகவல் கிடைத்துள்ளது, இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.