செய்திகள்

ஐ.நா. விசாரணை அறிக்கை: மூடிய அறைக்குள் பான் கீ மூன்- மங்கள விரிவான பேச்சு

அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனை சந்தித்து ‘மூடிய அறைக்குள்’ விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். மனித உரிமை விவகாரம், ஐ.நா. விசாரணை அறிக்கை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் முன்னுரிமைக்குரிய விடயங்களாகவுள்ள மனித உரிமைகள், பொறுப்புக் கூறல், மீள் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியதாக ஐ.நா. தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் முக்கியமான விடயங்களுக்கு தாம் ஆதரவளிப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்தார். இதனைவிட வெளிவிவகார அமைச்சரும் செயலாளர் நாயகமும் இலங்கையின் முக்கிய முன்னுரிமைக்குரிய விடயங்களான மனித உரிமைகள், பொறுப்புக் கூறல், மீள்நல்லிணக்கம் என்பவற்றில் கவனம் செலுத்தினார்கள்” என ஐ.நா. அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான பேச்சுக்களின் போது, ஐ.நா.வுக்கும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் இடையிலான கூட்டுறவு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் ஐ.நா. செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.