செய்திகள்

ஐ. நா . விசாரனையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும்: அரியநேத்திரன்

ஐ.நா.விசாரணையை ஆறு மாதங்கள் நீடிப்புக்கேட்ட இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களுக்கு விதித்திருந்த தடையினை நீக்கி நேரடியாக சர்வதேச விசாரணையாளர்கள் வடக்கு கிழக்கு பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாநரசபைக்குட்பட்ட கறுவேப்பங்கேணி,விபுலானந்தா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் ஞா.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு செலான் வங்கி முகாமையாளர் பத்மஸ்ரீ இளங்கோ,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த ஆட்சி மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணசபையில் எஞ்சியிருக்கும் இரண்டரை வருடங்களில் அமையவுள்ள ஆட்சியில் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகஇருக்கின்றோம்.கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகித்து பின்தங்கிய பகுதிகளில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

கிழக்கு மாகாண மக்கள் ஒன்றை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.நாங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் பற்று உறுதியுள்ள அரசியல் தலைமையினை கட்டியெழுப்பக்கூடியவர்களாக நாங்கள் மாறுவோமாக இருந்தால் நாங்களும் பல மாற்றங்களைச்செய்யமுடியம்.

இந்த அரசாங்கத்தில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதியொருவர் பதவியேற்றுள்ளார்.100நாள் வேலைத்திட்டம் ஒன்றை தனது செயற்றிட்டமாக முன்னெடுத்தார்.அந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் 42 நாட்கள் முடிந்துவிட்டது.இன்று 58 நாட்களே இந்த ஆட்சியை கொண்டு இழுப்பதற்கான சூழ்நிலையிருக்கின்றது.

அதற்கிடையில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் சீர்திருத்தத்தினை கொண்டுவருவதாக கூறியிருக்கின்றார்.அரசியல் அமைப்பு மாற்றத்தினை முன்வைப்பதாக கூறியிருக்கின்றார்.அவ்வாறான அரசியல் அமைப்பு மாற்றம் வருமாக இருந்தால் இலங்கையில் இருக்ககூடிய அனைத்து சிறுபான்மை மக்களினதும் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தக்கூடியவாறு,அவர்களின் தனித்துவத்தினை பாதுகாக்ககூடியவாறு இருக்கவேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

இன்று சமாதானம் வந்துவிட்டது,ஆட்சிமாற்றம் வந்துவிட்டது,தற்போது அனைத்தும் கிடைத்துவிட்டது என சிலர் கருதுகின்றனர்.காணாமலன்போனவர்வகள் தொடர்பில் மட்டக்களப்பிலேயே மூன்றுக்கு மேற்பட்டபோராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளது. அதேசமயத்தில் வடக்கு கிழக்கின் பகுதிகளிலும் நடைபெறுகின்றது.

ஆனால் எந்தவித சிறையும் இல்லாமல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாயவின் தடுப்பு முகாம் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.அதில் 700 தமிழ் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாககூட கூறுகின்றார்கள்.அதன் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை நடாத்தவேண்டிய பொறுப்பு தற்போதைய ஜனாதிபதிக்கு உள்ளது.தற்போதைய பிரதமருக்கு உள்ளது.இதனை அவர்கள் ஒரு வதந்தியாகவோ,செய்தியாகவோ விட்டுவிடமுடியாது.
கடத்தல்களில் ஈடுபட்டவர்கள்,வெள்ளைவான்களில் கடத்தியவர்களின் பெயர்களை மக்கள் கூறுகின்றனர்.அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும்.அவ்வாறு இல்லாமல் ஆணைக்குழுக்களை அமைத்து அதன் பரிந்துரைகளின் கீழ் மரணச்சான்றுகளை வழங்குவதான வாக்குறுதியை அளித்தார்களானால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது.

நாங்கள் காணாமல்போனவர்கள்,கொல்லப்பட்டவர்களுக்கான நீதியையே கேட்கின்றோம்.யார் கடத்தினார்களோ அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.அந்த விசாரணை மூலமாக கடத்தல்களில்ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

அந்த தண்டனையென்பது உள்ளூர் விசாரணை மூலம் வழங்கப்படும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.தற்போது சர்வதேச ரீதியான விசாரணையாக உருவாகியுள்ள ஐ.நா.வின் விசாரணை ஊடாக இந்த மக்களுக்கான நீதி தேவையாகவுள்ளது.அதனையே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

ஆனால் இந்த அரசாங்கமோ ஆறு மாதங்கள் கால அவகாசம் கேட்டு அந்த ஐ.நா.விசாரணையை பிற்போட்டுள்ளார்கள்.அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது.இந்த அரசாங்கம் ஒன்றைச்செய்யவேண்டும்.கடந்த அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களுக்கு விதித்திருந்த தடையினை நீக்கி நேரடியாக சர்வதேச விசாரணையாளர்கள் இங்கு வருவார்களானால் வடகிழக்கில் பலர் நேரடியாக சாட்சியமளிக்க தயாராகவுள்ளனர்.

அதனை இந்த அரசாங்கம் செய்யத்தவறுமாகவிருந்தால் தமிழ் மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஆறுமாத நீடிப்பினைக்கேட்ட அரசாங்கம் மேற்படி விடயங்களை செய்வதற்கு முன்வரவேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

IMG_0003 IMG_0030 IMG_0036 IMG_0044 IMG_0047 IMG_0064 IMG_0068 IMG_0074 IMG_0077 IMG_0100 IMG_0112 IMG_0123 IMG_0142 IMG_0146