செய்திகள்

ஒபாமா வந்தார், வென்றார், சென்றார்

கார்பொரேட் ஊடகங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒபாமா வருகையின் பொருளியல் விளைவுகளைக் காட்டிலும். இந்த வருகையின் குறியீட்டு (symbolic) தன்மையே இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகிறது. ஒருகாதலி காதலனைத் தழுவுவதைக் காட்டிலும் இறுக்கமாக மோடி ஒபாமாவைத் தழுவி, அவரது மார்பில்முகம் புதைத்து நின்ற காட்சி அவர்களின் கூட்டறிக்கையைக் காட்டிலும், இந்த உலகிற்குச் சொன்ன சேதி அதிகம்.

sam-109

இந்த வருகையின் ஊடாக என்னென்ன உடன்பாடுகள் ஏற்பட்டன, இரு நாடுகளும் எந்தெந்த வகைகளில் பயனடைகின்றன என்பதெல்லாம் பெரும்பாலும் பூடகமாகவே உள்ளன. “இந்திய அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்த வரிவடிவம்”(Defence Framework Agreement) மேலும் பத்தாண்டுகளுக்குத் தொடரும் என்பதுதான் இதழ்களில் வெளிவந்ததே ஒழிய அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே பெரிய பிரச்சினையாக இருந்த அணு ஆற்றல் ஒப்பந்தத்தில் இருந்த முரண்பாடுகள் தீர்ந்தன எனப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் அது குறித்தும் முழுமையான விவரங்கள் இல்லை. விபத்து ஏற்பட்டால் அணு உலையை அமைத்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்கிற இந்திய நிலைபாட்டை இந்தியா விட்டுக் கொடுத்துள்ளது மட்டும்விளங்குகிறது. பெரிய அளவில் சுமையை இந்தியா தன் பக்கம் ஏற்று இது நடந்துள்ளது என்பது மட்டுந்தான் வெளி வந்துள்ளதே தவிர அதிலும் ஒப்பந்தம் பூரண வடிவம் பெற்றதாகத் தெரியவில்லை. எச் 1 விசா, ‘அவுட்சோர்சிங்’ முதலான இந்தியத் தரப்பின் கவலைக்குரிய பிரச்சினைகளிலும் கூட இந்தியாவின் கவலைகளை அமெரிக்கா கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது என்பது மட்டுமே பதிலாகச் சொல்லப்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது என்பதைப் பொருத்தமட்டில் அய்.நா அவை சீரமைக்கப்படும்போது ஆதரவு அளிக்கப்படும் என்று வழக்கம்போல மீண்டும் உத்தரவாதம் அளிக்கப்படுள்ளது. 4 பில்லியன் டாலர் நிதி உதவி என்பதெல்லாம் பெரும்பாலும் அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் என்கிற வகையில்தான் உள்ளது. இந்தியாவுக்கு இதன் மூலம் பெரிய பயன்பாடுகள் ஏற்பட்டுவிடப் போவதில்லை. மொத்தத்தில் ‘இந்து’ நாளிதழின் சுகாசினி ஹைடர் சொல்லியுள்ளது போல இன்னும் பல மாதங்களுக்குப் பின்தான் எல்லாம் தெளிவாகும் (I think it is a significant visit, but it will take some weeks, maybe months to see just what was achieved)

இந்தியா தன் அணி சேராக் கொள்கையைக் கைவிட்டு அமெரிக்கச் சார்பு நிலை எடுப்பது அப்படி ஒன்றும் புதிதல்ல. ராஜீவ், நரசிம்மாராவ் காலத்திலேயே அது தொடங்கியது. 1998- 2004 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க கூட்டணி அரசு இந்த அமெரிக்கச் சார்பை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதோடு அதை மேலும் ஆழமாக்கியது. மன்மோகன் – சோனியா காலத்தில் இந்த நிலை வேகமாக வளர்ந்து,. இன்று மோடி அரசில் இப்போக்கு அதன் உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றோடொன்று பிரிக்க இயலாமல் கலந்து விட்டதாகக் காட்டிக் கொள்வது இன்று இரு நாடுகளுக்குமே தேவையாக உள்ளது. அமெரிக்காவின் “ஆசியாவைச் சுழல் மையமாகக் கொள்ளுதல்” (pivot to Asia) என்னும் போர்த் தந்திர அணுகல்முறைக்கு இது தேவையாக உள்ளது. “இந்திய அமெரிக்க இணைவு” வேறெப்போதையும் விட ஆழமாக உருவாகியுள்ளது எனக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இன்று அமெரிக்காவுக்கு உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அதிகரித்து வரும் சீனாவின் பொருளாதார அரசியல் தலையீடுகளை சோவியத்துக்குப் பிந்திய பெரும் ஆபத்தாக அமெரிக்கா கருதுகிறது. எனவே அது, தான் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஊடாகக் கால் பதித்துள்ளதை உலகிற்கு அறிவிக்க விரும்புகிறது.

ஒரு காலத்தில் உங்கள் ஆதரவு நாடாக இருந்த இந்தியாவை இப்போது நாங்கள் எங்கள் கைகளில் வைத்துள்ளோம் என்கிற ரீதியில் ஒபாமா இங்கு ஆற்றிய உரை ஒன்றில் ரசியா குறித்துப் பேசியதும், ஒபாமா – மோடி கூட்டறிக்கையில் தென் சீனக் கடற் பகுதி பற்றிய ஒரு குறிப்பு மற்றும் ஜப்பான் – இந்திய- அமெரிக்க முத்தரப்புக் கூட்டணி குறித்த சொல்லாடல்கள் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளதும் இதற்குச் சான்றுகள்.

மோடியைப் பொருத்தமட்டில் ஆட்சிக்கு வந்த இந்தப் பத்து மாத காலங்களில் அவருக்கு சொல்லிகொள்ளச் சாதனைகள் என்றால் இது போன்ற வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வருகைள்தான். அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின்னணியில் அமைச்சரவையில் புகுத்தப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் புள்ளிகளும், வெளியிலுள்ள பரிவாரங்களும் பேசுவதும் செய்வதும் பெரிய அளவில் ஆட்சிக்குச் சங்கடத்தை உள்ளாக்கியுள்ள நிலையில் மோடி அரசு அதை ஈடுகட்ட தன்னையும் தன் அரசையும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா கொண்டாடுவதாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திர்கு ஆளாகியுள்ளது. அதோடு மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்குப் பெருந்துணையாக இருந்த கார்பொரேட் நலன்களுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கைகையை அது கடை பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அதற்குள்ளது. அணு ஒப்பந்தத் தடைகள் நீங்கி அணு உலைகள் இன்னும்அதிக அளவில் கட்டப்படக் கூடிய நிலை உருவாகுமானால் அதன் மூலம் லார்சன் ட்யூப்ரோ, டாடா முதலான நிறுவனங்களுக்கு ஏராளமான நலன்கள் கிட்டும். மோடி அரசு ஒரு வகுப்புவாத அரசு மட்டுமல்ல, அது ஒரு கார்பொரேட் அரசும் கூட. தவிரவும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு கூடுதலை எதிர்கொள்ளவும், பாகிச்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை முறியடிப்பதற்கும் மோடிக்கும் அமெரிக்காவைப் பங்காளியாக்கிக் கொள்வது அவசியமாகிறது. .

ஒபாமாவுக்கு இன்று அளிக்கப்பட்ட இந்த வரலாறு காணாத வரவேற்பு என்பது மோடி அரசும் கார்பொரேட்களும் சேர்ந்து அடித்த கும்மி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

sam-110

ஒபாமா வருகையும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களும்

வரலாறு காணாத அளவிற்கு இந்திய கார்பொரேட் ஊடகங்கள், குறிப்பாக அச்சு ஊடகங்கள், ஒபாமா வருகைக்கு முக்கியத்துவம் அளித்தன. அயலுறவு வழமைகளை மீறி மோடியே விமான நிலையம் வரை சென்று ஒபாமாவைக் கட்டித் தழுவி வரவேற்றது, மிசேல் ஒபாமா விமானத்திலிருந்து இறங்கும்போது அணிந்திருந்த ஆடையை ‘டிசைன்’ செய்த இந்திய வடிவமைப்புக் கலைஞரின் பெயர் பிபு மொகபத்ரா என்பதிலிருந்து மோடி தன் பெயர் பொறித்த பத்து இலட்சம் மதிப்புள்ள கோட்டின் தயாரிப்பு நுணுக்கங்கள், மோடிக்கு உடை அலங்காரத்தில் உள்ள ஈடுபாடு, தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையும் வருகை தரும் ஒரே அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாதான் என்பதுமட்டுமல்ல,அவர்தான் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்கத் தலைவர்முதலான அபூர்வத் தகவல்கள், குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒபாமா 21 பீரங்கி வெடிமுழக்கத்துடன் வரவேற்கப் பட்டது, உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் கட்டித் தழுவும் கண் கொள்ளாக் காட்சி என ஊடகங்கள் ஒபாமா வருகையைக் கொண்டாடித் தீர்த்தன.

உலகின் ஆக மோசமான அசுத்தக் காற்றை இந்த மூன்று நாட்கள் டெல்லியில் தங்கி சுவாசிக்க நேர்ந்த காரணத்தால் ஒபாமாவின் ஆயுளில் ஆறு மணி நேரம் அழிந்தது. என ‘பிசினஸ் ஸ்டான்டர்ட்’ இதழ் கவலைப் பட்டது.

இந்திய அமெரிக்க அணு வணிகத்தில் இருந்த தடைகள் பகுதியாகவேனும் களைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இது ஜி.ஈ – ஹிடாச்சி, டோஷிபா-வெஸ்டிங்ஹவுஸ் (GE-Hitachi and Toshiba-Westinghouse Electric) போன்ற அமெரிக்க நிறுவனங்கள்,அரீவா (Areva) போன்ற ஃப்ரென்ச் நிறுவனங்கள் முதலானவற்றிலிருந்து அணு உலைகள் இறக்குமதி செய்யப்பட்டு அவை இலாபகரமான தொழிலாக அமைவதில்தான் உண்மையான சவால்கள் உள்ளன எனவும் ‘பிசினஸ் ஸ்டான்டர்ட்’ இதழ் தன் கவலையை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டது.

அமெரிக்க இந்திய நட்புறவு மேம்பட்டிருப்பது ஒரு பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுள்ளது என்றது ‘எகனாமிக் டைம்ஸ்’.

சீனா செய்துள்ளதுபோல அமெரிக்காவுடன் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றைச் செய்யத் தவறியதற்காக இந்தியாவை இலேசாகக் கண்டித்த ‘ஹின்டுஸ்டான் டைம்ஸ்’, எனினும் இந்த ஆண்டு இரு நாடுகளும் பாரிஸ் நகரில் இது தொடர்பாக விரைவில் பேச இருப்பது குறித்து நம்பிக்கை தெரிவித்தது.

சீனாவுடன் பகைமை ஏற்படும் வகையில் அமெரிக்கா வைக்கும் பொறியில் சிக்க வேண்டாம் என சீனா தன் குடியரசுதின வாழ்த்தில் இந்தியாவுக்குச் சுட்டிக் காட்டியதை ஒட்டி, “ஆசிய பசிபிக் குறித்த அமெரிக்க – இந்திய தொலை நோக்குச் செயல்பாடுகள் ‘டிராகனுக்கு’ச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது” எனத் தலைப்பிட்ட செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது டைம்ஸ் ஆஃப் இந்தியா.. எனினுமிந்தத் தொலை நோக்குப் பார்வை மிகப் பெரிய தாக்கங்களுக்கு வித்திடப் போகிறது’ எனவும் அது குதூகலித்தது.

எதிர்பார்த்தது போல சீன மற்றும் பாக் இதழ்கள் இந்தக் கோலாகலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை “ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும் உலக அளவிலும் மேலும் மேலும் சீனா தன் இருப்பை உறுதி செய்துகொள்வதைக் கண்டு இந்தியா மேற்கத்திய நாடுகளை நோக்கிச் சாயத் தொடங்கியுள்ளது எனவும் ஒபாமாவின் இந்த மூன்று நாள் வருகை நடைமுறை ரீதியாக அமைந்ததைக் காட்டிலும் குறியீட்டு ரீதியாக அமைந்தது (more symbolic than pragmatic) என்பதே முக்கியம் எனவும் சீன இதழ்கள் எழுதின.

பாகிஸ்தான் இதழ்கள் ஒபாமாவின் இந்த வருகை நிச்சயமாகப் பாகிஸ்தானின் நலனுக்கு எதிரானது என்கிற நோக்கில் எழுதின. இந்த வருகையை இந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்தும் வாய்ப்பையும் அவை சுட்டிக்காட்டின.

அதே நேரத்தில் அமெரிக்க ஊடகங்கள் ஒபமாவின் இந்தப் பயணம் குறித்து அதிகம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. என்.பி.சி, சி.பி.எஸ், ஏ.பி.சி(TV NBC, CBS & ABC) ஆகிய முக்கிய அமெரிக்க தொலைக்காட்சிகளின் மாலைச் செய்திகள் எதிலும் ஒபாமாவின் இந்தியப் பயணம் பொருட்படுத்தப்படவில்லை. அமெரிக்க இதழ்கள் இந்தப் பயணத்தை மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருங்கி இருப்பதாகக் காட்டிக் கொள்ள இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சி என்கிற அளவிலேயே மதிப்பிட்டன.

இத்தனை ஆர்பாட்டங்களுக்கும் இடையில், இத்தனை இறுக்கமான நட்புத் தழுவல்களுக்கு இடையில் ஒபாமா- மோடி கூட்டறிக்கையில் நாம் கவனத்தில் இருத்த வேண்டிய சில மெல்லிய உரசல்களும் இருக்கத்தான் செய்கின்றன. பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் சில அயலுறவு நட்புகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒபாமா- மோடி கூட்டறிக்கையில் இந்தியாவின் மிகப் பெரும் ஆபத்துகளாகக் கருதப்படுகிற பாக் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளாகிய லக்க்ஷர் ஏ தொய்பா, ஜமாத் உல் தாவா (LeT, JuD) முதலிய அபாயங்கள் பற்றி ஏதும் பேசப்படவில்லை. அமெரிக்கா இந்த வகையில் இந்தியாவுடன் முழுமையாக இசையவில்லை என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. அதேபோல ISIS க்கு எதிரான நடவடிக்கைகள், ரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றில் இந்தியாவும் இணைதல் முதலானவை குறித்தும் கூட்டறிக்கையில் ஏதும் இடம் பெறவில்லை. ஒபாமாவும் மோடியும் முற்றிலுமாக உடன்பாடு காணாத அம்சங்கள் என இவற்றைச் சொல்லலாம்.

அதேபோல ஒபாமா சில ‘பஞ்ச் டயலாக்களை’ உதிர்த்து மோடியையும் இந்துத்துவ சக்திகளையும் சற்றே எரிச்சலூட்டிய சம்பவங்களும் சில இருந்தன. அவை: 1”மதச் சகிப்புத் தன்மையைக் கடைபிடிக்கும் வரை இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்”. 2. “ஷாருக் கான், மேரி கோம், மில்கா சிங் இவர்களின் வெற்றிகளை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாட வேண்டும்” 3. “இந்தியாவில் வணிகம் செய்ய எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது?”

sam-111

ஒபாமா – மோடி பேச்சுவார்த்தைகளின் முக்கிய முடிவுகள்

1.நாலு பில்லியன் டாலர் உதவி என்பதைப் பொருத்த மட்டில், அதில் பெரும்பங்கு அமெரிக்கப் பொருட்களை வாங்குவது என்கிற வடிவிலேயே அது அமைகிறது. மோடியின் “இந்தியாவில் உற்பத்தி”(Make in India) என்கிற கொள்கைக்கு இது எதிரானது. மாறாக ‘அமெரிக்காவில் உற்பத்தி“ (Make in America) என்பதன் வளர்ச்சிக்கே இது பயன்படும். அணு ஆற்றல், இராணுவ தளவாடங்கள், பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ‘பசுமைத் தொழில்நுட்பங்களை” வாங்குதல் என்கிற வடிவில் அமெரிக்க வணிகத்திற்கும், இந்தியாவில் அமெரிக்க முதலீடு அதிகரிப்பதற்குந்தான் இன்றைய மோடி- ஒபாமா உடன்பாடுகள் வழி வகுக்கும்.

2.மேலும்பத்தாண்டுகளுக்கு இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் (Defence Framework Agreement) நீடிக்கப்படுகிறது. இதன் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது மேலும் இந்திய இராணுவத்தை அமெரிக்காவுக்கு நெருக்கமாக்கும். இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கவே இது இட்டுச் செல்லும்.

3. இந்திய பசிஃபிக் கடற் பகுதியில் கூட்டு இராணுவ அணுகல் முறை (Joint Strategic Vision on the Asia-Pacific and Indian Ocean region) மற்றும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு (tripartite alliance between US, Japan and India)ஆகியன குறித்து மோடி- ஒபாமா கூட்டறிக்கை பேசுகிறது. இது ஆசியாவை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இந்தியா அமெரிக்காவின் உள்ளூர் அடியாளாக விளங்கும் நிலைக்கே இட்டுச் செல்லும். தவிரவும் இது இந்தியாவை அண்டை நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்.

4.எல்லாவற்றிற்கும் மேலாக 2010ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட “சிவில் அணு ஆற்றல் விபத்துப் பொறுப்புச் சட்டம்” (Civil Nuclear Damage Liability Act) இன்று கேலிக்கூத்தாக்கப் பட்டுள்ளது. இந்தச் சட்டம் இயற்றப்படும்போது பா.ஜ.க எந்தப் பாதுகாப்பு விதிகளுக்காக அழுத்தம் அளித்ததோ அவற்றையே அது இன்று ஒபாமாவிடம் விட்டுக் கொடுத்துள்ளது . அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டிற்கு அணு உலை அமைததவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை இச்சட்டம் உறுதி செய்கிறது. இதை அமெரிக்கா உள்ளிட்ட அணு உலை வியாபார நாடுகள் எதிர்த்து வந்தன. இன்று மோடி அரசு, விபத்து நேர்ந்தால் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டம் ஒன்றின் மூலம் அதை ஈடு கட்டலாம் என ஒத்துக் கொண்டுள்ளது. அதற்காக இந்திய அரசு 1500 கோடி ரூபாயை முதலீடு செய்யும். அதாவது இழப்பீட்டுப் பொறுப்பு அணு உலை விற்பனை நாடுகளிடமிருந்து இந்திய மக்களிடம் மாற்றப்படுகிறது. தவிரவும் கூடுதல் இழப்பீட்டு ஒப்பந்தத்தையும்(Convention on Supplementary Compensation (CSC), இன்று இந்தியா ஏற்றுள்ளது (ratify). இது இன்னும் 3000 கோடி ரூபாய் சுமையை இந்தியாவுக்கு ஏற்றுகிறது. ஃப்ரான்ஸ், சீனா, ருஷ்யா, அமெரிக்கா முதலான நாடுகள்இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.விபத்து ஏற்படும் பட்சத்தில் உலை, கருவிகள், இடுபொருட்கள் அளித்தவர்கள் ஆகியோர் மீது பாதிக்கப்படும் நம் மக்கள் வழக்குத் தொடுக்கும் உரிமையை 2010 சட்டத்தின் 46ம்பிரிவு (Law on Tort) வழங்குகிறது. இதைப் பலவீனப்படுத்தும் வகையில் இந்திய அரசு “சட்டம் குறித்த பொதுநிலை அறிக்கை” (Memorandum of Law) ஒன்றை வெளியிட இந்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஒபாமா வருகைக்குப் பல மாதங்கள் முன்னதாகவே பல்வேறு குழுக்களை அமைத்து அணு உலை விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், இன்சூரன்ஸ் பாதுகாப்பு முறைகள், அவற்றில் முதலீடு செய்யத் தேவைப்படும் தொகைகள் என்பவை குறித்தெல்லாம் தனித் தனியே விவாதித்து இரகசியமாக் முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை ஒபாமா வந்தபின் ஒப்பந்த வாசகங்களாக்கப்பட்டன. இப்படி மக்களைப் பாதிக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சினையில் மக்களை விலக்கி விட்டு அதிகாரிகளும் அரசும் கூடி முடிவெடுத்து, அந்நிய அரசொன்றுடன் ஒப்பந்தமாக்குவது எந்த வகையிலும் ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல. வார்த்தைகளை விசிறி சளசளப்பதற்குத் தயங்காத மோடி இந்த அறிவிப்பைச் செய்யும்போது,”நமது சட்டம்,நமது பன்னாட்டுக் கடப்பாடுகள், தந்திரோபாயம் மற்றும் வணிகச் சாத்தியங்கள்” (our law, our international obligations and tactical and commercial viability).ஆகியவற்றின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன” என்பதோடு வாயை மூடிக்கொண்டார். இது குறித்த இதழாளர் சந்திப்பில் இப்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளா,அப்போதைய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் கேள்விகளுக்குச் சற்று எரிச்சலோடு பதிலளித்ததைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டின. தாங்கள் செய்தவற்றை வெளிப்படுத்த அவர்கள் கூச்சப் படுவதையே இவை காட்டுகின்றன.

இந்திய அமெரிக்க 123 அணு ஒப்பந்தத்தில் இந்திய அணு ஆற்றல் தொடர்பான முயற்சிகள் அனைத்தையும் கண்காணிக்கும் உரிமை எந்திரங்கள் மற்றும் இடுபொருட்களை அளிப்பவர்கள் என்கிற வகையில் அமெரிக்காவுக்கு அளிக்கப்படுகிறது. இதை இறையாண்மைக்கு எதிரானது என இந்தியா மறுத்து வந்துள்ளது. இதை இப்போது அமெரிக்கா விட்டுக் கொடுத்துள்ளதாகக் சொல்லப்பட்டுள்ளது. எந்த அளவு இது விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது, எந்த அளவு கண்காணிப்பு தொடரும் என்பதெல்லாம் தெரியவில்லை. எப்படியோ அமெரிக்கா இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள 123 ஒப்பந்தம் இனி தடையின்றிச் செயல்படும் என்பது மட்டும் விளங்குகிறது.

sam-112

இந்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு (1974) மேற்கு நாடுகள் இந்தியாவிற்கு அணு உலைத் தொழில்நுட்பங்கள் மற்றும் இடு பொருட்கள் விநியோகத்தை நிறுத்தியிருந்தன. அப்படி நிறுத்தி வைத்திருந்த இடுபொருள் வினியோகக் குழுக்களிடம் பேசி தடைகளை நீக்க ஆவன செய்வதாகவும் ஒபாமா வாக்களித்துள்ளார். இவை எல்லாம் அணு ஆற்றல் உற்பத்தித் தொழிலில் கால் பத்தித்துக் கொள்ளை லாபம் சம்பாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பொரேட்களின் காதுகளில் தேன் பாய்ச்சியுள்ளன.

5.தமது முதலீட்டாளர்களுக்க்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் சாதகமாக இந்திய மருந்துச் சட்டங்கள், தொழிளாள்ர் சட்டங்கள் முதலியவற்றில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தி வந்தது. இவற்றில் என்னென்ன சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை.

இப்படியான முக்கிய பிரச்சினைகள் எதையும் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவராமல் ஒபாமா வருகையை ஒரு திருவிழா ஆக்கித் திசை திருப்பின கார்பொரேட் ஊடகங்கள். சமூக ஊடகப் போராளிகளும் கூட ஒபாமாவின் பெயர் பொறிக்கப்பட்ட கோட், தாஜ்மகாலுக்கு அவர் போகாமல் திருப்பி விடப்பட்டது முதலான அம்சங்களில் மட்டுந்தான் கவனம் செலுத்தினார்களே தவிர மேலும் முக்கியமான இது போன்ற பிரச்சினைகளில் காத்திரமான விமர்சனக்களை வைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.