செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம்: வங்காளதேச இளம் வீரர் லித்தோன் தாஸ்

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வங்காளதேச அணி வெல்ல வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் புதுமுக வீரரான 20 வயது லித்தோன் தாஸ் கூறியுள்ளார்.
வங்காள தேச அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கீப்பராக செயல்படவில்லை. இதனால் சர்வதேச போட்டியில் முதல் முறையாக அடியெடுத்து வைத்தார் விக்கெட் கீப்பரான 20 வயதான லித்தோன் தாஸ்.

டெஸ்ட் போட்டியின் பெரும்பாலான பகுதி மழையினால் பாதிக்கப்பட்டது. வங்காள தேசம் பேட்டிங் செய்யும்போது தாஸ், அனுபவ வீரர் போல் அதிரடியாக விளையாடி 45 பந்தில் 44 ரன்கள் குவித்து அனைவரது பார்வையையும் ஈர்த்தார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் குறித்து அவர் கூறும்போது ‘‘நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம. போட்டிக்கு போட்டி நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். இதனால் இந்தியாவை வெல்ல வாய்ப்புள்ளது.
ரஹிம் ஒருநாள் போட்டிக்கு குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய இடத்திற்கு அவர் சிறந்த வீரர். அணியில் இடம்பெற நான் கடினமாக முயற்சி செய்கிறேன். ஒருநாள் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் என்னால் என்ன செய்யமுடிமோ அதை நன்றாக செய்வேன். ரஹிம் ஒரு உயர்தர வீரர். நான் பேட்ஸ்மேனாக இடம்பெற்றால் அதிக அளவு ரன் குவிக்க முயற்சி செய்வேன். உள்ளூர் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதைப்போல் சிறப்பாக விளையாட முடியும் என்பதில் உறுதியாக உள்ளேன்’’ என்றார்.
வங்காள தேசம் அணி சமீபத்தில் பாகிஸ்தானை 3-0 என்றும், உலகக்கோப்பையில் காலிறுதி போட்டி வரையும் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.