செய்திகள்

ஓக்லான்ட் ஆய்வு நிறுவக அறிக்கை தகவல்களை அரசு நிராகரிப்பு

ஓக்லான்ட் ஆய்வு நிறுவகம் இலங்கையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்த அறிக்கையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளைஇலங்கை அரசாங்கம் திட்டமிட்டு நசுக்குவதாகவும் குறிப்பாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வட மாகாணம் தொடர்பிலான அணுகுமுறையில் கணிசமான மாற்றங்களை செய்திருப்பதாகவும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பின்னணியைக் கொண்டிருந்த ஆளுநர்களை மாற்றி நிர்வாகத்துறையில் அனுபவம் மிக்கவர்களை ஆளுநர்களாக நியமித்ததாகவும் குறிப்பிட்ட அவர் யாழ் குடாநாட்டில் இராணுவத்தினரின் சோதனை சாவடிகளும் குறைக்கப்பட்டுள்ளதகவும் கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன வடக்கில் முதல் கட்டமாக 1013 ஏக்கர் நிலங்களை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவித்ததாகவும் பின்னர் சம்பூரில் 818 ஏக்கர் நிலத்தை விடுவித்ததாகவும் கூறினார்.

கணாமல் போனவர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ருவான் விஜயவர்த்தன பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்படும்போது தமது உறவினர்கள் எவரும் சிறையில் இருக்கின்றனரா என்ற விபரம் பொதுமக்களுக்கு தெரியவரும் என்று பிரதமர் ஆலோசனை கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.