செய்திகள்

ஓட்டைக் கொட்டகைக்குள் இருந்து ஒரு வயிறு சோற்றுக்காக போராடும் 7 உயிர்கள்! கண்டு கொள்ளாத அதிகாரிகள்?

-கே.வாசு-

வடக்கின் அபிவிருத்திகள், அரசின் உதவித் திட்டங்கள், பாராளுமன்ற மற்றும் மாகாணசபையினரின் உதவித் திட்டங்கள் என பரவலாக வழங்கப்படுகின்ற போதும் கடந்த 17 வருடமாக எந்த உதவியுமின்றி இன்று ஊசலாடிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கொட்டகைக்குள் 7 உயிர்கள் வாழ்வதற்காக போராடிய பரிதாப நிலை ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் என பல அரச உத்தியோகத்தர்கள் மக்கள் நலன்சார்ந்த அடிப்படையில் செயற்படுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த போதும் இந்த குடும்பத்தை மட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அந்த குடும்பத்தை சந்தித்த போது கிடைத்த அதிர்ச்சித் தகவல்களே இவை…

வவுனியா, மகாறம்பைக்குளம், லக்சபானா வீதியில் குடியிருக்கும் ஒரு வறுமையான குடும்பமே கணேஸ் மல்லிகா குடும்பம். கத்தார்சின்னக்குளத்தில் அரச காணியில் காடு வெட்டி 1988 ஆம் ஆண்டு முதல் இவர்கள் அங்கேயே குடியிருந்தார்கள். அக் காணிக்கான சிட்டை ஒன்றும் பிரதேச செயலகத்தால் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதுவே இவர்களின் காணி உறுதிப்பத்திரமும் கூட. நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையில் கணேஸ் மல்லிகாவின் குடும்பம் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மடுவில் தஞ்சம் புகுந்தது. நிலமை ஒரளவு சீருக்கு வர 1999 ஆம் ஆண்டு தமது சொந்த இடமான வவுனியா, கத்தார் சின்னக்குளத்திற்கு வந்த போது இவர்களது காணிகள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதில் வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. அப்போது இருந்த கிராம அலுவலர் இவர்களுக்கு வேறு காணி பெற்றுத் தருவதாக கூறி இவர்களிடம் இருந்த காணி தொடர்பான ஆவணத்தையும் பெற்றுள்ளார். ஆனால் இன்று வரை இவர்களுக்கான காணி வழங்கப்பட வில்லை.

IMG_5314அதன்பின்னர் மகாறம்பைக்குளம், லக்சபானா வீதியில் அரச காட்டுத்துண்டம் ஒன்றை வெட்டி துப்பரவு செய்து அதில் தற்காலிக கொட்டில் அமைத்து வாழ்ந்து வந்தனர். அப்போது அப்பகுதியில் நிலை கொண்டிருந்த ஆயதக்குழு ஒன்றும் அவர்களுக்கு அந்த காட்டை வெட்டி குடியிருக்க அனுமதி வழங்கியிருந்தது. அன்று தொடக்கம் கடந்த 17 வருடங்களாக அப்பகுதியிலேயே இவர்கள் குடியிருக்கின்றார்கள். அவர்களுக்கான காணி உரிமைத் பத்திரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க ஒரு நேர சோற்றுக்காகவே போராட வேண்டிய நிலையில் தற்போது அங்கு 7 உயிர்கள் போராடிக் கொண்டிருக்கின்றது. மழை காலங்களில் இவர்களின் வீடுகளுக்குள் நேரடியாக வரும் மழை நீர் காரணமாக ஒரே சிவராத்திரி தான்.

கணேஸ் மல்லிகா தம்பதிகளுக்கு 7 பிள்ளைகள் மகன் ஒருவர் 1996 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் மகள் ஒருவரும் 2001 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார். மல்லிகாவை கூட இராணுவம் கைது செய்து கொழும்பு வர கொண்டு சென்று விசாரணை செய்து விடுவித்தும் இருந்தது. இந்நிலையில் அச்சம் காரணமாக அயலர்களின் தொடர்புகள் கூட சீராக கிடைக்காத நிலையில் கணவனின் கூலி வேலையால் கிடைக்கும் வருமானத்தில் 5 பிள்ளைகளும் இவர்கள் வாழ்ந்தனர். வேயப்பட்ட கூரைகள் வருடங்கள் பல கழிந்த நிலையில் உக்கி விழுந்து விட மழை, வெயிலை மட்டுமன்றி உள் இருந்தே நிலா பார்க்க கூடியதாக இருகிறது வீடு. நாலு பலகையால் மறைப்பு வைக்கப்பட்ட ஒட்டை கொட்டில் ஒன்று அதுவே இவர்களின் சமையலறை. இன்று அதை விட வசிதியுடன் பலரது வீடுகளில் கோழிக் கூடு கூட உள்ளது.

IMG_5327யுத்தம் முடிந்து 7 வருடம் கழிந்தும் கூட எந்தவித வீட்டுத் திட்டமோ, மலசலகூட வசதியோ, வாழ்வாதார உதிவிகளோ இவர்களுக்கு வழங்கப்படவில்லை. அரச அதிகாரிகள் கண்டு கொள்ளவும் இல்லை. வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுடன் இருக்கும் இக் குடும்த்தினர் சிறுநீர் கழிப்பதற்கு கூட வீட்டில் ஒரு மறைவிடம் இல்லை. அதனால் சிறுநீரில் இருந்து மலசலகூடத்திற்காக வீட்டில் இருந்து 500 மீற்றருக்கு அப்பால் உள்ள பற்றைகளுக்குள் தான் இவர்கள் மறைந்து கொள்ளுகிறார்கள். சனசெறிவுவும், குடிமனையும் மிக்க இப்பகுதியில் யாருடைய கண்ணிலும் படாது காலைக் கடனை முடிப்பது என்பதே இவர்களுக்கு சோதனை தான்.

இவ்வாறான அடிப்படை வசதிகளை பெறமுடியாது ஒரு வயிறு கஞ்சியாவது கிடைத்தால் நாம் வாழ்ந்து விடுவம் என கண்ணீர் விடும் இந்த குடும்பத்திற்கு அரசாங்கத்தினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் எந்த உதவியும் கிடைக்காமைக்கு காரணம் என்ன….?

இது தொடர்பில் கணேஸ் மல்லிகா இவ்வாறு கூறுகிறார். நான் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர் என எல்லோரிடமும் எனது கஸ்ரத்தை சொல்லியிருக்கிறேன். கடிதங்கள் கூட பல எழுதிக் கொடுத்திருக்கின்றேன். (கண்ணீருடன் கடிதங்களின் பிரதிகளை காட்டுகிறார்) எவரும் எந்த உதவியும் செய்யவில்லை. மழை பெய்தால் பக்கத்து வீட்டில் உள்ள சிலர் தரப்பால் தருவார்கள். அதை வைத்து கூரையயை மூடிட்டு ஒழுக்கு படாத இடத்தில் இருப்பம். ஒரு பிள்ளை கலியாணம் செய்திட்டார். அவர் கூட இந்த கொட்டிலுக்க தான் இருக்கிறார்கள். என்ர இரண்டு பிள்ளையை இழந்து, கணவனும் இருதய நோயாளி. எனக்கும் ஆமி அடிச்சு ஏலாது. படிக்கிற பிள்ளைகளோட கஸ்ரப்படுகிறேன். சாப்பிட கூட போராடும் எனக்கு ஒரு சுயதொழில் இருந்தாக்கூட புழைச்சு விடுவேண். எம்மை தான் கடவுளும் கைவிட்டுவிட்டார் என கண்ணீர் விட்ழுகிறார் மல்லிகா. அவர் மட்டுமல்ல அந்தக் குடும்பமே இன்று கண்ணீருடன் தான் வாழ்கிறது. இதற்கு காரணம் யார்….?\

IMG_5302

IMG_5292

N5