செய்திகள்

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு ஒரே வழி

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மீனவ சமுதாய மக்கள் உள்ளிட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்குவதால் மட்டும் அவரின் உயிர் திரும்பக்கிடைத்து விடுமா? இதுபோன்ற நிகழ்வுகளில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான செயல்களில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தி.மு.க தலைவர் கருணாநிதி தான். இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பது மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.