செய்திகள்

கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவில் -கிழக்கு முதலமைச்சர்

கிழக்கு மாகாணசபையின் கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாக கிழக்குமாகாணம் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவற்றினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையவேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பில் தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணசபையில் அனைத்துவிட்டுக்கொடுப்புகளையும் செய்து மாகாணத்தினை முன்னேற்றவேண்டும் என்ற கொள்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட்டுவருகின்றோம்.ஒரு விட்டுக்கொடுப்புடன் கூடிய மனநிலையை அதிகமாக கொண்டவர்களுடைய ஆட்சியாக கிழக்கு மாகாண ஆட்சி உள்ளது.பாதிக்கப்பட்ட மாகாணத்தினை கட்டியெழுப்பவேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது.

பாடசாலைகளிலேயே சமூகத்தினை பிரித்து நடாத்துகின்ற சூழலில் ஒற்றுமையினை கட்டியெழுப்ப வேண்டுமென்பதில் நாங்கள் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளோம். 35வருட காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் தமிழ் -முஸ்லிம் சமூகம் பிரிக்கப்பட்டனர்.அதன் பின்னணியை நாங்கள் பார்த்தால் அது திட்டமிட்டவகையில் நடெந்தேறிய நாடமாகும்.ஆகவே அதனை உணர்ந்து மீண்டும் ஒற்றுமையினை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் முனைந்துள்ளோம்.

கடந்த மாகாணசபை காலத்தில் செய்யக்கூடிய பல வேலைத்திட்டங்கள் செய்யப்படாமையினால் அவற்றினை தோண்டியெடுத்து மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சரியான முறையில் கடந்த காலத்தில் செயற்பட்டிருந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டிருக்காது.

கிழக்கு மாகாணத்தில் எந்தவித முதலீடும் இல்லாத மாகாணமாகவுள்ளது. புறக்கணிக்கப்பட்ட மாகாணமாகவே இருந்துவந்துள்ளது. கொழும்பில் உள்ள முதலீட்டு சபையினால் எதுவித முதலீடுகளும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை. எங்களிடம் பல வளங்கள் உள்ளது.ஆனால் நாங்கள் இங்கிருந்து வெளிநாட்டுக்கு பெண்களை ஏற்றுவதை விட இங்குள்ள பொருட்களை ஏற்றுமதிசெய்யலாம். இங்குள்ள வளங்களை பயன்படுத்து கிழக்கு மாகாணத்தினை தன்னிறைவடைந்த மாகாணமாக மாற்றுவதற்கு அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகின்றோம். கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை அரசாங்கம் முறையாக பயன்படுத்தினால் வெளிநாட்டில் இருந்து பால் உட்பட பல இறக்குமதிக்கான செலாவணியை மீதப்படுத்தலாம்.

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு செல்லும் இளைஞன் அங்கு பாலைவத்தில் கடும் கஸ்டத்தின் மத்தியில் தொழில்புரியும்போது இருபதாயிரம் முப்பதாயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனால் அந்த பாலைவனத்தில் படும் கஸ்டத்தினை இங்கு பட்டு தொழில் செய்யும்போது இலட்சக்கணக்கில் உழைக்கலாம்.இதனை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். பல வாய்ப்புகளை நாங்கள் வைத்துக்கொண்டு இளைஞர்களை ஏற்றுமதிசெய்யும் மாகாணமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான பல விடயங்கள் கண்டுகொள்ளப்படாத காரணமாக பாரிய பின்னடைவுகொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் இன்றுள்ளது. அவற்றினை நிவர்த்திசெய்வதற்காக அரசியல்வேறுபாடுகள் இன்றி பயணத்தினை தொடர்ந்துள்ளோம். எமது ஆட்சிக்காலத்தில் ஒரு பணிப்பெண், ஒரு சாதாரண தொழிலாளி வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பதை சவாலாக கொண்டு எமது பணியை மேற்கொண்டுவருகின்றோம். அதற்கு பொதுமக்களின் அனைத்து பங்களிப்பு மிக அவசியம் ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் அதிகளவான மதுபானசாலைகள் உள்ளது. ஒரு சமூகத்தினை அழிப்பதற்கான அனுமதியாக இந்த மதுபானசாலைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.