செய்திகள்

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் அனுப்பப்பட்டன

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று புதன்கிழமை அனுப்பப்பட்டுள்ளன.

கடுமையான பொலிஸ் பாதுகாப்புடன் மாவட்ட அரச செயலகங்களிலிருந்து இந்த வாக்குப் பெட்டிகள் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில், நுவரெலியாவிலிருந்து கினிகத்தேனை மினுவன்தெனிய நோக்கி வாக்குபெட்டியை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வண்டியுடன், வட்டவளை, கித்துல்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி விறகு ஏற்றிச் சென்ற லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், ஜீப் வண்டியில் பயணித்த 3 கடமை உத்தியோகத்தர்கள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக வாகனம், 3 உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரையும் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவித்தார்.