செய்திகள்

கண்ணீருடன் வாழும் அவல நிலையில் சிவபுரம் மக்கள்

கே.வாசு

கடந்த கால யுத்த பாதிப்புக்களின் வடுக்களை உடலிலும் உள்ளத்திலும் சுமந்தவர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள், யுத்தத்தால் அவையங்களை இழந்தோர், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் என முற்றுமுழுதாக பாதுகாத்து பராமரிக்கப்பட வேண்டியவர்களை யுத்தத்திற்கு முன்னர் குடியேற்றிய கிராமமே பரந்தன், சிவபுரம்.

கிளிநொச்சி, பரந்தன், பகுதியில் உள்ள கிளி 44 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இக் கிராமம் 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 314 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி இக் கிராம குடியேற்றம் அப்போது ஆரம்பிக்கப்பட்டது.

இறுதி யுத்தம் நடைபெற்ற போது முகமாலை முன்னரங்க நிலைகளை ஊடறுத்தி இராணுவத்தினர் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய போது 2008 ஆம் ஆண்டு  இக் கிராம மக்கள் இடம் பெயர்ந்து கரையோரப் பகுதியூடாக முள்ளியவாய்க்கால் வரை சென்றனர்.  2009 ஆம் ஆண்டு மே மாதம் இராணுவத்தினரிடம் தஞ்சம் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட செட்டிகுளம் முகாமில் அடைக்கப்பட்டனர்.

தமது உறவுகள், உடமைகள், உரிமைகள் என அனைத்தையும் பறிகொடுத்த  நிலையில் நலன்புரி நிலையங்களில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த நிலையில் வாழவழியின்றி தவித்திருந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு  மீள்குடியேற்றப்பட்டனர்.

கணவனை இழந்த பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட 55 குடும்பங்கள், போரினால் அவையங்களை இழந்தவர்களை தலைமைத்துவமாகக் கொண்ட 25 குடும்பங்கள், பெற்றோர்களை இழந்த 8 பிள்ளைகள் என 335 குடும்பங்கள் இங்கு குடியிருக்கின்றனர்.

sivapuram, vavuniya  (3)

கொட்டும் மழைக்குள் ஊசலாடிக் கொண்டிருக்கும் தற்காலிக ஓலைக் கொட்டகைக்குள் இவர்களில் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.  மழை காலங்களில் வீட்டுக்குள் நேரடியாக வரும் மழைத்துளிகளாலும் உட்புகும் வெள்ளநீராலும்,  கோடை காலங்களில் கடும் வெய்யிலாலும்  ஊசலாடுகின்றன இவர்களுடைய வீடுகள்.

2010 ஆண்டு அமைத்துக் கொடுக்கப்பட்ட இவ் ஓலைக் கொட்டகைகளிலேயே போகிறது இவர்களது வாழ்க்கைப் போராட்டம். இவர்கள் வசிக்கும் இக்  காணிக்கு உறுதிப்பத்திரங்கள் கூட இன்னும் வழங்கப்படவில்லை.

யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இக் கிராமத்தில்  ஒரு சில குடும்பங்களுக்கு மாத்திரமே இது வரை வீட்டுத்திட்டம்  வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களின் நிலை அதோ கதி தான். யுத்த பாதிப்புக்களை சுமந்தவர்களின் அடையாளமாக இருக்கும் இக் கிராமத்திற்கு அரசின் பொருளாதார உதவிகள் சரியாக கிடைக்காத நிலையில் வாழ்வதற்காக போராடுகிறார்கள்.

மந்தை வளர்ப்புடன் நாளாந்த கூலித் தொழிலுக்கு சென்றே தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்துகின்றனர். இங்கு  ஆரம்ப பாடசாலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது.  ஏனைய வகுப்பு மாணவர்கள் இக் கிராமத்திலிருந்து சுமார் 03 கிலோமீற்றர் தூரம் நடந்தே பாடசாலைக்கு செல்கின்றனர். அண்மையில் இப் பகுதியைச் சோந்த 12 வயது மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_0539

இந் நிலையில் இக் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி சண்முகநாதன் இவ்வாறு  கூறுகின்றார். நான் 2010ம் ஆண்டு  மீள்குடியேற்றப்பட்டேன். எனது 3 பிள்ளைகளுடன் குடியேறினேன்.  முன்பு தச்சு வேலை, மேசன் வேல, ஊதுபத்தி உற்பத்தி  போன்ற வேலைகளைச்  செய்து  எனது குடும்பத்தை  பராமரித்து வந்தேன். தொழில் செய்ய முதல்  இன்றி இருக்கும் என்னை நோய் கூட விட்டு வைக்கவில்லை. இதனால் கூலிவேலை கூட செய்ய முடியாத நிலையில் இருக்கின்றேன். என்னுடைய குடும்பத்தை எப்படித் தான் காப்பாற்ற போறனோ தெரியாது என்கிறார் கண்ணீருடன்.

இதே போன்று இக் கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பின்னால்  ஒவ்வொரு கண்ணீர் கதைகள் உண்டு. ஓலைக் கொட்டில், முன்னால் உள்ள வீட்டு  முற்றத்தில் சிறுவர்களுடன் துள்ளி விளையாடிய பத்து வயது சிறுமி எஸ்.சிந்து கூறுகையில்,  ஷெல் விழுந்து என்ர அம்மாவும் அப்பாவும் செத்திட்டாங்க. அன்ரி ஆட்களுடன் தான் இருக்கிறன். அன்ரியும் சித்தப்பாவும் கூலி வேலைக்கு போய்த்தான் என்னை பார்க்கினம். நான் கெதியா வளந்து  படிச்சு அன்ரியாக்களை உழைத்துப் பார்க்கனும். இதுவே எனது ஆசை என்கிறார் எதிர்பார்ப்புக்களுடன் சிந்து.

sivapuram, vavuniya  (2)

சிந்து போன்று இக்கிராமத்தில் வாழும் பல சிறார்களின் எதிர்காலம் என்ன…? அவர்களுக்காக எமது சமூகம் என்ன செய்யப்போகின்றது..?

போக்குவரத்துப் பிரச்சனை,  குடி நீர்தட்டுப்பாடு, வேலையில்லாப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் இம் மக்களுக்கு இருந்தாலும்  இவர்களுடைய அடிப்படைத்  தேவை அவர்களது காணிக்கான  உறுதிப்பத்திரமும், வீட்டுத்திட்டமுமே. ஆட்சி மாறியபோதும்  இவர்களது துயர வாழ்க்கை மாறவில்லை. அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள்  என பலரின் வாசல் படிகளை தட்டிய போதும் எந்த உதவிகளும் கிடைக்காது  விரக்தியில் உள்ளனர். எனவே இவர்களது  வாழ்வுக்கு மைத்திரியுகம் என்ன செய்யப் போகிறது.

 IMG_0547