செய்திகள்

கனடா நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட மேகி நூடில்ஸ் குறித்து பரிசோதனை

இந்தியாவில் மேகி நூடில்சை திரும்ப பெற கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மேகி நூடில்ஸ் பொருட்களை குறித்து அந்நாட்டின் கனடா உணவு ஆய்வு அமைப்பு (சி.எப்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து ஹெல்த் கனடா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இறக்குமதி செய்யப்பட்ட மேகி நூடில்ஸ் பொருட்களில் முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை திரும்ப பெற கூறி வற்புறுத்தப்படும்.  இந்திய சந்தையில் நெஸ்லே பொருட்களை தடை செய்வது உள்ளிட்ட மேகி பிராண்ட் நூடில்ஸ் தொடர்பாக சமீபத்தில் இந்தியாவில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து சி.எப்.ஐ.ஏ. எச்சரிக்கையுடன் இருக்கிறது.

கனடா நாட்டில் பல்வேறு நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட மேகி பிராண்ட் நூடில்சுகளில் காரீயம் கலந்து இருப்பதற்கான சாத்தியம் குறித்து சி.எப்.ஐ.ஏ.வானது உணவு பாதுகாப்பு விசாரணை ஒன்றை நடத்தி வருகிறது.  அந்த அமைப்பின் விசாரணையில், பொருட்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை திரும்ப பெறும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்நாட்டின் ஆரோக்கிய ஒழுங்குமுறை அமைப்பான ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு குறித்து சி.எப்.ஐ.ஏ. தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது.  கூடுதல் தகவல் கிடைத்தவுடன் அவை பொதுமக்களிடம் பகிரப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  இந்தியாவில், டெல்லி, உத்தரகாண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மேகி நூடில்ஸ் விற்பனையை தடை செய்துள்ளது.  கடந்த வெள்ளி கிழமை மேகி நூடில்சின் அனைத்து வகை பொருட்களையும் மனித நுகர்வுக்கு பாதுகாப்பற்றது மற்றும் தீங்கு விளைவிக்க கூடியது என்று கூறி மத்திய ஆரோக்கிய ஒழுங்கு அமைப்பான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தடை விதித்ததை அடுத்து நெஸ்லே நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது