செய்திகள்

கமலின் அடுத்த படதலைப்பு தூங்காவனம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் நடிப்பில் தற்போது ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம் 2-’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘உத்தமவில்லன்’ பெரிய வெற்றியைத் தேடித்தந்துள்ளது. இதைத்தொடர்ந்து கமல் தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

கமல் புதியதாக நடிக்கும் படத்திற்கு ‘ஒரே இரவு’ என்று தலைப்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் இப்படம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் மற்றும் கதைகள் இணைய தளத்தில் வெளியானது. தற்போது இப்படம் பற்றி கமல் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல் கூறும்போது, ‘‘இப்படத்தின் தலைப்பு ‘தூங்கா வனம்’. இப்படத்தை என்னிடம் உதவியாளராக பணியாற்றிய ராஜேஷ் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சானு வர்கீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது திரில்லர் படமாகவும் தமிழ் மற்றும் தெலுங்கிலும் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 24-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது’’ என்றார்.