செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்ட தீர்மனனகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் – 1
மத்திய பாஜக அரசு அனைத்து எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2015-ஐ நிறைவேற்றுவதில் பிடிவாதமாக உள்ளது. இதன் வெளிப்பாடு தான் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு அவசர சட்டத்தை இரண்டாவது முறையாக குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விவசாயிகளின் சம்மதமில்லாமல் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் இந்த சட்டம் விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிப்பதற்கு ஒப்பானதாகும். எனவே, விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015ஐ திரும்பபெற வலியுறுத்தி அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வரவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. தீர்ப்பை அமல்படுத்த காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டுமென்ற தீர்ப்பின் மிக முக்கிய அம்சத்தை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு தமிழக அரசு பலமுறை வற்புறுத்திய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்காமல் காலங்கடத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் இரண்டு அணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அணைக் கட்டப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனம் பாதிக்கப்படுவதுடன் தமிழ்நாட்டின் குடிநீருக்கும் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தும். கர்நாடக அரசின் இந்த முயற்சி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானதுமாகும். இதை தலையிட்டு தடுக்க வேண்டிய மத்திய அரசு மௌனமாக இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

மத்திய அரசு மற்றும் கர்நாடக மாநில அரசின் இத்தகைய போக்குகளை கண்டித்து ஏப்ரல் 9ந் தேதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் சார்பில் நடைபெறவுள்ள ரயில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள முன்பாக நடைபெறவிருக்கும் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று வெற்றியடையச் செய்ய வேண்டுமென்று கட்சி அணிகளை தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.