செய்திகள்

கலாமை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட அமார்த்தியா சென்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, அவரது விருப்பத்துக்குரிய திட்டமான நாளந்தா பல்கலைக்கழக திட்டத்திலிருந்து வெளியேற்றும் வகையில், அமார்த்தியா சென் அவரை அவமதிக்கும் வகையில் செயற்ப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கலாம் ஒரு காட்டமான கடிதம் எழுதியிருந்தார். அந்த கடித விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் தனது இதயத்திற்கு நெருக்கமான நாளந்தா திட்டத்திலிருந்து தன்னை விலக்க அமார்த்தியா சென் முயல்வதாக குற்றம் சாட்டி இருந்தார் கலாம். இருப்பினும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ள கலாம், நடப்பது குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பியதாக தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

நாளந்தா திட்டம் கையாளப்படும் விதம் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், எனவே இதில் நான் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கலாம் கூறியுள்ளார். எல்லாமே தவறாக போய்க் கொண்டிருப்பது தன்னை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாகவும் கலாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புத்தர் காலத்து நாளந்தா பல்கலைக்கழகம் அக்காலத்தில் மிகச் சிறந்த உயரிய கல்வி நிறுவனமாக விளங்கியதாகவும். அதை உயிர்ப்பித்து மீண்டும் செயல்படுத்த கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி மத்திய அரசு இந்தத் திட்டத்தை கையில் எடுத்தது.