செய்திகள்

கஹவத்தையில் காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் மீட்பு

கஹவத்தை கொட்டகேதெனிய பகுதியில் நேற்று அதிகாலை முதல் காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் இன்று பிற்பகல் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள நீரோடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமையில் இருந்தபோது தனது மனைவி நேற்று அதிகாலை முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவன் பொலிஸாரிடம் முறையிட்டிருந்த நிலையில் அந்த பெண்ணை தேடி விசேட தேடுதல் நடவடிக்கைகள் நேற்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த பெண்ணின் வீட்டில் இரத்தக் கறைகள் காணப்பட்ட நிலையில் பிரதேசத்தில் பதற்ற நிலமையும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் அந்த வீட்டுக்கு அருகிலுள்ள நீரோடையிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை கஹவத்தை பகுதியில் கடந்த காலங்களில் 14 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.