செய்திகள்

காணாமல்போனோர் எவரும் வெலிக்கடை சிறையில் இல்லை

காணாமல்போனவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தபோதும் அவ்வாறு எவரையும் இதுவரை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை என காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற பொங்கல் தின விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தங்களின் காணாமல்போன உறவினர்கள் இருப்பதாக சிலர் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய காணாமல்போனோரின் உறவினர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

எனினும் இங்கு காணாமல்போனவர்கள் எவரும் இருக்கவில்லை என அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற 14 ஆயிரம் பேரின் விபரங்கள் கிடைத்துள்ளன.

அவர்களுள் காணாமல்போனவர்களின் பெயர்கள் இருக்கின்றனவா? என ஆய்வு செய்யவுள்ளதாகவும் அவ்விபரங்களை விரைவில் இணையத்தளத்தில் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்படும் விபரங்களின் அடிப்படையில் காணாமல்போனவர்கள் இருக்கின்றார்களா என்பதனைக் கண்டறிய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.