செய்திகள்

காணி, கல்வி, ஆட்சி உரிமைகள் மலையகத்தின் உயிர்மூச்சு உரிமைகள்: மனோ கணேசன்

இலங்கையில் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தங்களுக்கென சொல்லிக் கொள்ள சொந்தக் காணி வைத்துள்ளனர். கிழக்கில் முஸ்லிம் மக்கள் சொந்த காணி கொண்டுள்ளனர். சிங்கள மக்களை பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் மலையக தமிழர்கள், குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் இன்னமும் இந்நாட்டில் வாடகைக்கு வாழும் சமூகமாகவே வாழ்கிறார்கள்.

தோட்ட தொழிலாளிக்கு சொந்தக்காணி இல்லை. மலையகத்தில் இருந்து கொழும்பு வந்து உழைத்து வெற்றி பெற்ற பலர் வசதி வாய்ப்பு ஏற்பட்ட பின் சொந்த காணி வாங்கியுள்ளார்களே, தவிர மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் லயன் வாழ்க்கை வாழ்கின்றனர்.

இந்த இழிநிலை மாறவேண்டும். இந்நிலை மாற்றத்துடன் கல்வி உரிமையும், ஆட்சி உரிமையும் மலையக தமிழருக்கு கிடைத்திட வேண்டும். இந்த மூன்று நோக்கங்களுக்காக இங்கு பதவி ஏற்றிருக்கும் மலையக அமைச்சர்கள் உழைத்திடுவார்கள் என் நான் நம்புகிறேன என தோட்ட உட்கட்டமைப்பு துறை அமைச்சர் திகாம்பரம், கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சர் வேலாயுதம் ஆகியோருக்கு கொழும்பு மருதானை பூக்கர் மண்டபத்தில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நான் சீக்கிரம் பாராளுமன்றம் வர வேண்டும், அமைச்சர் ஆக வேண்டும் என தம்பி திகாம்பரம் இங்கே கூறினார். அவரது நல்லெண்ணத்துக்கு நன்றி. பதவிகள் உரிய வேளையில் என்னை தேடி வரும். நீங்கள் பதவிகளில் அமரும்போது அது நான் அங்கே இருப்பது போன்றது என்றே நான் எண்ணுகிறேன். நமது ஒற்றுமை முக்கியம். இலங்கை தொழிலாளர் காக்கிரசுடன் கூட நான் ஒற்றுமை வேண்டி சப்ரகமுவ மாகாணத்தில் நல்லெண்ணத்தில் கரங்கோர்த்தேன். ஆனால், ஒற்றுமையை மறந்து, பசில் ராஜபக்ச சொன்னதை கேட்டு, அவர்கள் கொழும்பில் தேவையில்லாமல் போட்டியிட்டு எங்கள் வாக்குகளை சிதைத்து கொழும்பு தமிழ் பிரதிநிதித்துவத்தை கொஞ்சம் குறைத்தார்கள். எனவே இன்று நான் அவர்களிடமிருந்து ஒதுங்கி கொண்டேன். இதற்கு யார் பொறுப்பு? இது நான் படித்த பாடம். எனவே இனி நான் நிச்சயமற்ற தற்காலிக கூட்டணிகளுக்கு தயார் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

சொந்தக்காணி, அந்தகாணியில் தனி வீடு, இதுதான் இந்த அரசால் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம். இது படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். தோட்ட நிறுவன காணிகளை விடுவித்து பெருந்தோட்ட அமைச்சர் வேலாயுதம் ஆரம்பிக்க, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம் அங்கே வீடுகளை கட்டி முடித்து வைக்க வேண்டும். இது நடக்குமென்ற நம்பிக்கை பிரகாசமாய் என்னிடம் இருக்கின்றது.

சொந்தகாணியில் வீடு இருந்து வாழ்ந்தால் அது தோட்டம் இல்லை, கிராமம் ஆகும். வடகிழக்கில் சென்று குடியேறி வாழும் மலையகத் தமிழர்களை பாருங்கள். அவர்கள் சொந்த காணியுடன் கமத்தொழில் செய்து சந்தோசமாக வாழ்கிறார்கள். அவர்கள் அங்கே கிராமத்தவர்கள். அதுபோல், மலையகத்தில் தற்போது வழக்கில் இருக்கும் ‘தோட்டம்’ என்ற பதம் அகற்றப்பட்டு அங்கும் கிராமம் என்ற முறை கொண்டு வரப்பட வேண்டும்.

வடக்கில் யாழ் பல்கலைக்கழகம் இருக்கின்றது. அது யாழக உடன்பிறப்புகளின் கல்வி எழுச்சியின் அடையாளம். அதுபோல் மட்டக்களப்பில் கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் இருக்கின்றது. அது கிழக்கு வாழ் தமிழர்களின் கல்வி அடையாளம். அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை அமைத்து முஸ்லிம்கள் மக்களின் கல்வி எழுச்சியை மாமனிதர் அஷ்ரப் அடையாளப்படுத்தினார். சிங்களப்பகுதிகளில் ஏறக்குறைய பதினான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ஆனால் மலையகத்திற்கென ஒரு பல்கலைக்கழகம் இல்லை. மலைநாட்டு மக்கள் மட்டுமென்ன மாற்றாந்தாய் பிள்ளைகளா? பல்கலைக்கழகம் செல்ல இங்கு ஆளில்லை என்று முட்டாள்தனமாக சொல்லாதீர்கள். ஆரம்பத்தில் கலை, வர்த்தக பிரிவுகளை கொண்டு மலையகத்தில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம். பிறகு அது ஏனைய பிரிவுகளுடன் விரிவுபடுத்தப்படலாம். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை மாமனிதர் அஷ்ரப் இப்படித்தான் ஆரம்பித்தார். இது தெரியாத இங்குள்ள தலைவர்கள் அஷ்ரப்பின் வரலாற்றை தேடி படிக்க வேண்டும். இது போல் இன்று மலையகத்தின் இதயமான நுவரேலியாவில் தேசிய தமிழ் பாடசாலைகள் இல்லை. இந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாடாசாலைகள் தேசிய தமிழ் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும். இந்த மலையக பல்கலைக்கழக, தேசிய பாடசாலை கல்வி உரிமைகளை நமது கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் பெற்றுத்தருவார் என நம்புகிறேன்.

இலங்கை நாட்டில் 7 முதல் 15 ஆயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை உள்ளது. ஆனால் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற, நுவரெலியா பிரதேச சபையிலும், அம்பேகமுவ பிரதேச சபையிலும் ஒவ்வொன்றிலும் தலா இரண்டு இலட்சம் பேர் வாழ்கிறார்கள். ஆசியாவிலே இவைகள்தான் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய பிரதேச சபைகள். இந்நிலையில் அரசு நிர்வாகம் எப்படி மக்களை போய் அடையும்? மலைநாட்டு மக்களுக்கு மாத்திரம் ஏன் இந்த பாரபட்சம்? இதனை இன்னமும் எத்தனை நாட்களுக்கு பொறுத்துக்கொண்டு இருப்பது? இதனை இனி நாம் மாற்றி அமைக்க வேண்டும். நுவரெலியா பிரதேச சபையை ஆறாகவும், அம்பேகமுவ பிரதேச சபையை ஆறாகவும் பிரிக்க வேண்டும். இதன் மூலம் புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டு, இன்னமும் நிறைய மக்கள் பிரதிநிதிகளும் உருவாக வேண்டும். இதன்மூலம்தான் அரசு நிர்வாகம் நமது மக்களை சென்று அடையும். இதுதான் மலையகம் கோரும் ஆட்சி உரிமை.

மார்ச் மாதம் இலங்கைக்கு பாரத பிரதமர் மோடி வருகிறார். அவரிடம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூற நாம் தயங்க மாட்டோம். மலையக மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க இந்திய அரசுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. எனவே மோடி வரும்போது நாம் நிச்சயம் ஓடிப்போய் கூற வேண்டியதை அவருக்கு எடுத்துக் கூறுவோம். மலையக மக்களின் காணி உரிமை, கல்வி உரிமை, ஆட்சி உரிமை இவற்றுக்கு துணை இருக்க வேண்டிய கடப்பாடு இந்திய அரசுக்கு இருக்கின்றது.