செய்திகள்

காமன் விழாக்கண்ட தமிழ்மண் காணும் காதலர் தினம்

மாதர் கண் நெஞ்சு மயங்குகையில் அது காதல். வள்ளுவன் களவுஇயல் காதலுக்குத் தந்த வரைவிலக்கணம் இது.

அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

பெண்ணின் அற்புதத் தன்மையும் மயக்கும். பெண்ணின் அதிகாரத்தன்மையும் மயக்கும். இதனையே தொல்காப்பியம் பெண்ணின் இயல்பாக எடுத்து அணங்கு என்றால் தெய்வம் என்று அற்புதத்தையும் பேய் என்று அதிகாரத்தையும் விளக்கும் சொல் “பெண்” என்று விளக்கியது.

பெண் சிரித்தாலும் மயக்கம், பெண் முறைத்தாலும் மயக்கம். சிரிக்கையில் கூடல் முறைக்கையில் ஊடல். ஊடலிலும் விலகாது உறுதியுடன் துணையிருந்தால் இருத்தல். ஊடலில் விலகினால் பிரிந்தால் இரங்கல். இது ஆணுக்குப் பெண் என்னும் பெருஞ்சத்தி தரும் இயல்பு வாழ்க்கை.

இந்த உணர்வு மானிடத்தவள் என்ற முறையில் அவளுக்கும் இருக்கு என்று தன்சார்பாக அவள் உள்ளத்து உணர்வாகத் தன்னுணர்வைத் தமிழ்த்தலைவன் தலைவி மேல் ஏற்றியுரைத்த உள்ளத்து உள்ளதாக – இன்பம் உருவெடுக்கவைப்பதாக- தௌ;ளத் தெளிந்த தமிழில் உண்மை தெளிந்துரைப்பதாக பரந்த தமிழரின் அனுபவ மொழியே தமிழ்க்கவிதைகள் என்னும் கட்டிக் கரும்புகள். தமிழ்க்கவிதை மொழிதான் அவளைக் கண்டாலே தித்திக்கும் தேனை உண்டாலே தித்திக்கும்” என்று காதல் இன்பம் உணர்வற்று எழும் உள்ளப்பிணைப்பு என்று சொல்லிட வள்ளுவனுக்கும் பாரதிதாசனுக்கும் இடமளித்தது. அதே கவிதைத்தமிழ் தான் எண்ணஅருநலத்தினாள் இணையள் நின்றுழி கண்ணோடு கண்இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும்இநிலைறொது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
என உள்ளப்பிணைப்பின் அகக்காட்சியினை எண்ணத்தின் கவிதைமொழியாக்க இடம்கொடுத்தது. உள்ளதை உள்ளபடி சொல்லும் யதார்த்தத்தன்மையினை தமிழ் கொடுக்கின்ற பொழுது பாலியலை இயல்புடன் கூறி அது வெறியல்ல வாழ்வின் வழியென உணர்த்தவும் கம்பனால் முடிந்தது. இதனாலேயே நோக்கிய நோக்கு எனும் நுதிகொள் வேல் இணை ஆக்கிய மதுகையான் தோளின் ஆழந்தன வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும் தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே என பாலியல் பொதுமையைத் தமிழ்வழி மானிடவழமையாகக் கம்பன் இயல்புத்தன்மையுடன் உணர்த்துவதைக் காண்கின்றோம். அடுத்த பாடலிலே கம்பன் தொடுத்த மொழி 1

உடல்புணர்ச்சியல்ல மானிடக்காதல் உயிர்ப்பிணைப்பு என்பது வலியுறுத்தப்படுகையில் தான் உதிரும் உடல்களைக் கடந்து உதிரா உயிரின் சேர்ப்பு ஆண்பெண் காதல் உறவு என்று தொல்காப்பியன் சொன்ன பால்வரைத் தெய்வம் வகுத்த உறவு என்ற தமிழர் தத்துவம் மீள்வாசிப்புப் பெறுகிறது. பருகிய நோக்கு என்னும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாள்-கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்.
ஆம். பருகிய நோக்கு என்னும் உளமொன்றான அன்பு- பிரிக்கவியலாப்பாசம் அதுதான் திருமணமுறி எழுதும் மை. அது உலராது. நிறம்மாறாது. ஒருவரை ஒருவர் உள்ளம் ஈர்த்தலால் வந்த உறவு உடல்சார் உறவல்ல ஒன்றாகி இரண்டாக. இருவரும் இதயமாற்றுச் செய்து இயங்கும் புதிய வாழ்க்கைத் தளம் குடும்பவாழ்வு. இயற்கையிலேயே கலைமான் பிணைமான் சிறுநீரை அருந்தட்டும் என்றும் பிணைமான் கலைமான் சிறுநீரை அது அருந்தட்டும் என்றும் “கள்ளத்தின் ஊச்சும் சுரம்” கண்டவன் தமிழன்.

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாதன் கள்ளத்தின் ஊச்சும் சுரம்மென்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி மாறன்பொறையனார் ஐந்திணை ஐம்பதில் காட்டிய இயற்கை தரு காட்சியின் மானிட நிலைப்படுத்தல் அண்ணலும் அவளும் இருவரும் மாறிப்புக்கு இதயம் கொண்டு வாழ்ந்திடு அன்பின் பெருநிலை. இந்நிலையே மானிடத்தை தெய்வநிலைக்கு உயர்த்தும் பெருநெறி. இதனையும் கம்பனின் அடுத்த பாடலான
மருங்கு இலா நங்கையும் வசைஇல் ஐயனும் ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?
எனும் பாடல். இங்கு கரையற்ற அன்புடைத் தலைவியும் குறையற்ற குணமுடைத் தலைவனும் ஓரூயிரும் ஈரடலுமாயினர் என்று காதல் என்பதன் உச்சப்பொருளை கம்பன் கவித்துவப்படுத்துவதைக் காண்கின்றோம். அதுமட்டுமல்ல ஆண்பெண் காதல் கலவி என்பது பால்வரைத் தெய்வத்து விதிப்பு என்னும் தமிழர் தத்துவத்தை உறுதி செய்யக் கூடிய வகையிலே கருங்கடல் கலவிப் பள்ளி விடுத்த திருமாலும் திருமகளும் பிரிந்தமை கூடிய நிலையாக இராமரின் சீதையின் கண்கள் சேர்ந்தமையைக் காட்டுகிறான் கம்பன்.

கம்பனின் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் நாடகபாங்கான கவிதைப்பரவல் இவ்வாறு காதலின் வழி கடவுள் நிலை காணும் தமிழர் மரபில் காதலின் வழி உடல் உள இன்ப உணர்வு கண்டே அதனைத் தாண்டிச் சென்றிடல் வேண்டுமென்பதைச் சுட்டிக் காட்டிய கம்பன் காதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமானநிலை (நஙரயடவைல) கொடுப்பதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.
பொருஅரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அத் திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேர்க்கைப் போரில் ஒருவருக்கு ஒருவர் தோலார்இஒத்தனர் :- “உயிரும் ஒன்றே இருவரது உணர்வும் ஒன்றே” என்ற போது யாவர் வெல்வார்?

இவ்வாறு தமிழ்ப்பெரும் இலக்கியங்கள் எல்லாமே காதலைப் போற்றுகின்றன. காதலிக்கும் காதலனுக்கும் சமானமான இடத்தினை அளிக்கின்றன. அத்துடன் காதல் இல்லையேல் தமிழ்க்கவிதையின் உயிர்த்துடிப்பே மறைந்து விடும் என்பதனையும் உணர்த்துகின்றன.

காதல்தான் தன்னலத்தைத் தாண்டி தன்னலமற்ற முறையில் வாழ்வதற்கான முதற் பயிற்சி. காதல்தான் “தன்னுயிர் தானறப் பெறும்” பயிற்சிக்கான முதற்படி. ஆனதினால்தான் காதலைப் பேணிட வீரம் பிறக்கும். காதல் மனையாளுடன் வாழ்ந்திடக் குடும்பம் அமையும். குடும்பத்தில் மானிடத்தின் உயிர்ப்பாக மழலைகள் வளர்வர். மானிடத்தின் இணைப்பாக உறவுகள் தளைக்கும். உறவுகளின் பிணைப்பாக ஊர் பிறக்கும். ஊரின் தொகுப்பாகத் தேசம் மலரும். தேசத்தின் வனப்பாக சமுகமும் பொருளாதாரமும் அரசியலும் ஆன்மீகமும் வடிவெடுத்து வளமான உலகொன்று வாழ்வதற்குத் தளமாகும். உலகெல்லாம் மானிடம் ஒன்றென்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ்ப்பண்பாட்டின் தன்மை சொல்லும் உள்ளம் திறக்கும். உள்ளத்துள் உறைகின்ற இறைவனின் தன்மையினை உயிர் உணர, ஆணவம் விடை பெற, நினைப்பற நினைபப்பதாலே கன்மம் விடை பெற, இச்சைகள் இருப்பினும் இன்பமும் துன்பமும் இறைவனின் செலுத்தலில் நிகழ்வுறும் நிகழ்வுகள். என்னில் நிலைபெற அவை என் செயலின் பயன்களல்ல என்பதினால் நன்மையும் தீமையும் உள்ளத்தில் தாக்கத்தைத் தந்திடாப் பெருவாழ்வு. பற்றற்ற நிலையில் பற்றில் பங்கு கொள்ளும் கடமையென வாழ்ந்து பலனை எதிர்பாராப் பெருமனம் வசப்பட ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஆனந்தக் கூத்தாடி யாதொரு தெய்வம் கண்டீராகில் அத்தெய்மாகி நிற்பது சத்தியம் சிவம் சுந்தரம் என்றே உணர்ந்தவன் தமிழன்.

உண்மைக்காக உழைக்கையில் நன்மைத்தனத்தைப் பெருக்குகையில் அழகினைப் பேணும் மனதினை வளர்க்கையில் பொய்மையும் துன்பமும் சோகமும் விலகி எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தாம் வாழக்கடவுள் தந்த நிலையினை உறுதி செய்ய அவ்வுயிர் எடுக்கும் முயற்சியே என அதற்காய் உழைத்தல் எது இந்த உலகைத் தாங்குகிறதோ அதற்குத் துணையாக இருத்தல் தருமம் என விரியும். தருமவாழ்வினை வாழ்தல் என்பது தளர்ந்தவர்க்கம் தள்ளாதவர்க்கும் இழந்தவர்க்கும் இல்லாதவர்க்கும் உறுதுணையாக உளவளமாக உயிர்கொடு செயலாய்ச் செய்பவன எனலாம். தானம் என்பது உள்ளதை உரியவர்க்குக் கொடுத்து அதன் வழி வளர உதவுதலாகும். பெண் என்னும் என் குலவிளக்கை உன் குடும்பவிளக்காய் ஏற்றிடு போற்றிடு உயிர்p உள்ளவரை என்ற செய்திடு தானம் கன்னிகாதானம். காலமெல்லாம் இணைந்து வாழும் கடமை தருவது பிணைந்து பெறும் இன்பம் என்று எடுத்துரைக்கும் தன்மையினால் கன்னிகாதானம் ஒவ்வொரு உரிமைக்கும் ஒவ்வொரு கடமையுண்டு சட்டமொழி பேசும் சடங்காகிறது. சடங்கின்றி மனதால் ஒன்றாய் ஆவிக்கலப்பின் அமுத சுகந்தனில் மூடியிருக்கும் வழிநான்கிற்கும் கூட செவிவழி பாரதியின் குயில் கூவல் “உறுதி உறுதி உறுதிக்கோர் உடைவுண்டாயின் இறுதி இறுதி இறுதி” என்பதாகும். எனவே கற்பென்றும் இருத்தல் என்றும் தமிழிலக்கியங்கள் கூறும் அகத்திலக்கணம் காதலில் உள்ள உறுதியினை திருமணத்தில் பிரியா நிலையினை பெண்ணுக்கும் ஆணுக்கும் வாழ்க்கைச் சட்டமாக்கி ஒருத்தனுக்கு ஒருத்தி என்றும் ஒருத்திக்கு ஒருத்தன் என்றும் தாவலுக்கு எல்லையும் வகுத்தது பெண்ணடிமைத்தனமல்ல. மண்ணடிமைபடாது மறத்தமிழிச்சியும் தமிழனும் வாழ்வதற்கான சமுதாய நீதி என்பதனை இன்றையத் தமிழர்கள் உணர்ந்திடல் வேண்டும்.

பாலியல் தன்மை (ளுநஒ) இயற்கையின் பிரிப்பு செயற்கையால் மாற்றமுடியாத விதிப்பு. ஆனால் இந்தப் பாலியல் தன்மை தோற்றுவிக்கும் பால்தன்மை (Gender) வேறுபாடுகள் (Differences) ஒதுக்கல் (Discrimination) செய்வதற்கான போக்காகவும் சமுகத்தில் மாறிவிடுவதால் ஆணும் பெண்ணும் சட்டத்தின் முன் மட்டுமல்ல பாலியல் தவிர்ந்த எல்லாநிலைகளிலும் சமம் என்னும் சட்டம் மானிடத்தை நிலைநாட்ட மிகமிக அவசியமானது. இந்தப் பால்தன்மைச் சமத்துவத்தை நிலைநிறுத்த நடாந்த உலகளவான பெண்கள் போராட்டங்களே பெண்ணிலைவாதத்தை (Feminism) தோற்றுவித்தது. இது காலத்தின் தேவை. ஆனால் இந்த ஆண்பெண் பால்நிலைச் சமத்துவம் அவரவர் சமுக பொருளாதார அரசியல் ஆன்மீகத் தன்மைகளுக்கு ஏற்ப மாறுபட்டு அடிப்படையில் ஆண்பெண் சமத்துவம் என்பதில் வேறுபடாது இருக்கும் பொழுது மட்டுமே அந்த அந்தக் கலாச்சாரங்கள் தம்நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்குமான பால்நிலைச் சமத்துவத்தை உறுதி செய்யும். இதற்கு மாறாகப் பெண்ணிலை வாதம் உலகப் பொதுமையானது என்ற எண்ணத்தில் செயற்பட்டாலோ அல்லது ஆண்பெண் பாலியல் சமத்துவமானது என்று செயற்பட்டாலோ அது கலாச்சாரச்சீரழிவுகளை அரசியல் வீழ்ச்சிகளை ஆக்கிரமிப்புக்கள் அடக்குமுறைகள் பெண்ணிலைவாதத்தின் பின் ஒளிந்து கொள்வதை உருவாக்குமே தவிர மானிடத்தின் சுதந்திரத்தை உறுதி செய்யாது. இதனாலேயே காதலர் தினத்தைச் சிலர் ஐரோப்பியவாக்கத்தின் பின்னணியில் பார்த்து காதலர் தினத்தின் புனிதத்தைத் தமிழர்கள் உணர்வதைத் தடுத்து நிற்கின்றனர்.

இவர்களுக்கு இந்தத் தமிழ் மண்தான் காமனுக்கு விழாக்கண்டு காமனைத் தெய்வமெனப் போற்றி காதலின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தியது என்பது நினைவுக்கு வருவதில்லை. கியூபிட் காதல் அம்பு ஐரோப்பாவில் பாயு முன்பே கடவுளுக்கு மேலேயே காதல் அம்பு மன்மதக் கணை தொடுத்தது இந்தியக் கலாச்சாரம் என்பதனை இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. இன்று உலகம் காதலுக்கு என்று ஒருநாளை ஏன் ஒதுக்கியது என்பதும் இவர்களுக்குத் தெரியாது. காதலர் தினமும் மற்றைய பெருவிழாக்கள் போல் வர்த்தக மயப்படுத்தப்பட்டதினை இவர்கள் உணரவில்லை. மற்றைய உலகப் பெருவிழாக்களை வர்த்தக மயப்பட்ட நிலையில் ஏற்கும் இவர்கள் காதலுக்கான ஒரு தினத்தை மட்டும் ஒழுக்கக்கேட்டின் நாள் என்று எண்ணிக் கலங்குவது அதிசயமான ஒன்று. உலகத்துடன் இணைவதும் உலகத்துள் மூழ்காது தனித்துவத்தை மரபைக் காப்பதும் எல்லா வாழும்தன்மை கொண்ட இயக்கத்தன்மை கொண்ட மனிதசமுதாயங்களினதும் தேவையாக உள்ளது. விவேகாநந்தர் கூறுவார் “ பழையதை எண்ணி மரபைப் பேணுதல் வேண்டும். ஆனால் பழைய காலத்துள் வாழாது புதிய காலத்துள் வாழ்தல் வேண்டும்”. காலத்தின் பரிணாமமான காமன்விழாவின் புதிய பரிமாணம் காதலர் தினம் என்பதை உணர்வோம் உலகுடன் இணைவோம். அதனுள் மரபினைப் பேணித் தமிழின் உயர்வைத் தமிழரின் காதல் சிறப்பை வாழ்வாக்குவோம்.