செய்திகள்

காரணமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது விசாரணை: தினேஷ் குற்றச்சாட்டு

எதுவித காரணங்களுமின்றி எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் பொலிசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றிய அவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் கெளரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். பாராளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸினுடைய கடவுச்சீட்டு எந்தவிதமான காணரங்களும் இன்றி பொலிஸாரால் தடுத்துவைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவோ அல்லது இது குறித்து விசாரணைகளோ நடத்தப்படாத நிலையில் டிரான் அலஸ் எம்.பியின் கடவுச் சீட்டு தடுத்துவைக்கப்படுள்ளது.

இது அவருடைய பாராளுமன்ற சிறப்புரிமையை மீறியிருப்பதாக தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார். அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு ஒருநாள் முழுவதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். எதிர்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் எவ்வித அடிப்படையுமின்றி குற்றஞ்சாட்டப்படுவதுடன் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.