செய்திகள்

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சு விபரங்கள் –அம்பாறை புறக்கணிப்பு

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சு மற்றும் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கான தெரிவாக திருகோணமலையை பிரதிநிதித்துவபடுத்தும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான தண்டாயுதபாணியும் விவசாய அமைச்சருக்கான தெரிவாக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கமும் பிரதி தவிசாளருக்கான தெரிவாக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவபடுத்தும் பிரசன்னா இந்திரகுமாரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாணசபையில் அமைச்சு பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட இரா.துரைரெட்னத்துக்கு எதுவித பதவிகளும் வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு அமைச்சு பதவி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தம் மற்றும் இன அடக்குமுறை காரணமாக அம்பாறை மாவட்ட மக்கள் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.